ராணிப்பேட்டை:ராணிப்பேட்டையில் ஆருத்ரா நிதி நிறுவன ஏஜன்டுகளின் வீடுகள் மீது, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலியில் ஓராண்டுக்கு முன், ஆருத்ரா நிதி நிறுவன கிளை தொடங்கப்பட்டது. இதில், 1 லட்சம் ரூபாய் கட்டினால், 20 ஆயிரம் முதல், 30 ஆயிரம் ரூபாய் வரை வட்டி தரப்படும் என, அறிவித்தனர்.
இதனால் நெமிலி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த, 300-க்கும் மேற்பட்டோர், 200 கோடி ரூபாய் அளவில் முதலீடு செய்தனர்.
ஆறு மாதத்திற்கு முன், இந்நிறுவனம் மோசடி செய்ததாக மூடி, 'சீல்' வைக்கப்பட்டது. மேலும், பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால், நிதி நிறுவன நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டனர்.
நேற்று முன்தினம் இரவு, நெமிலி கிளை ஏஜன்டுகளான யோகானந்தம் மற்றும் சதீஷ் ஆகியோர் வீடுகளின் மீது, 100-க்கும் மேற்பட்டோர் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
இதில், கதவு கண்ணாடி, 'பைக்' ஆகியவை சேதமடைந்தன. ஏஜன்ட் யோகானந்தம் வீட்டை தாக்கிய போது, அவரது சகோதரர் சதீஷ் இருந்துள்ளார்.
அவரை, முதலீட்டாளர்கள் மரத்தில் கட்டிப் போட்டனர். அரக்கோணம் டி.எஸ்.பி., யாதவ் கிரீஷ் அசோக், முதலீட்டாளர்களிடம் பேச்சு நடத்தியதையடுத்து, சதீஷை விடுவித்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.