ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் ஞானாம்பிகை உடனுறை காளத்தீஸ்வரர் கோவிலுக்கு, ஓய்வு பெற்ற நீதிபதியும், தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாய தலைவருமான சுதாகர் மற்றும் பரம்பரை அறங்காவலர் சேகர் ஏற்பாட்டில் நேற்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
இதை முன்னிட்டு, 13 யாக சாலை குண்டம் அமைக்கப்பட்டு, கடந்த, 5ல், கணபதி ஹோமம், யாகசாலை பிரவேசம், முதல்கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று முன்தினம் இரண்டாம் கால யாகசாலை பூஜை மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜை நடந்தது.
நேற்று காலை, 4:00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை நடத்தப்பட்டு, தொடர்ந்து கருவறை விமானத்தில் யாக சாலையில் பூஜிக்கப்பட்ட கலச புனித நீரை ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
விழாவில், ஓய்வுபெற்ற நீதிபதிகள் சத்திய நாராயணன், பாரதிதாசன், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழக டி.ஜி.பி., விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.