ஈரோடு:கீழ்பவானி வாய்க்கால் கான்கிரீட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஈரோடு பெருந்துறை சாலை, மேட்டுக்கடை வாய்க்கால்மேட்டில், விவசாயிகள் காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவங்கினர்.
போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் ரவி பேசியதாவது:
கீழ்பவானி கான்கிரீட் திட்டத்தை, 95 சதவீதம் விவசாயிகள் எதிர்க்கின்றனர். பழுது பார்க்கும் பணி மேற்கொள்ளவும், உயர்நீதிமன்ற உத்தரவுக்கும் மரியாதை தருகிறோம். ஆனால், முழு கால்வாய், கிளைகளை கான்கிரீட் பணி செய்வதை எதிர்க்கிறோம். கால்வாயில் உள்ள பழைய கட்டமைப்புகளை மட்டும் சீரமைக்கும் பணி துவங்க ஒப்புக்கொண்டோம்.
அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் அளித்த உறுதி மொழியை மீறி, சில இடங்களில் கிளை வாய்க்கால், மண் கரைகளில் கான்கிரீட் போடப்படுகிறது. தி.மு.க., எதிர்க்கட்சியாக இருந்தபோது, எங்கள் கருத்தை கேட்ட பின் பணிகள் துவங்கப்படும் என, உறுதியளித்து விட்டு, தற்போது கான்கிரீட் பணி செய்து வருகிறது.
இவ்வாறு பேசினார்.