வால்பாறை:வால்பாறை புதுத்தோட்டம் பகுதியில் சிறுத்தை நடமாடுவதால், சுற்றுலா பயணியருக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகத்தில், வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய வனச்சரகங்களில், வனவிலங்குகள் அதிகளவில் உள்ளன.
குறிப்பாக, வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில் புதுத்தோட்டம் பகுதியில், புலி, சிறுத்தை, யானை நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. புதுத்தோட்டம் எஸ்டேட் பகுதி வழியாக ஆயிரக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் செல்லும் நிலையில், அதிகாலை, மாலை நேரங்களில் சிறுத்தை உலா வருகிறது.
அப்பகுதியில், சிறுத்தையை போட்டோ எடுத்த இயற்கை ஆர்வலர் வடிவேலு கூறுகையில், ''கடந்த, 12 ஆண்டுகளாக இயற்கை ஆர்வலராக பணியாற்றி வருகிறேன். வால்பாறை, புதுத்தோட்டம் பகுதியில் சாலையோரத்தில், இரவு நேரத்தில் சிறுத்தை அமர்ந்திருப்பதை கண்டேன். அதை புகைப்படம் எடுத்து, வனத்துறைக்கு தெரிவித்தேன்,'' என்றார்.
வால்பாறை வனச்சரக அலுவலர் வெங்கடேஷ் கூறுகையில், ''வால்பாறை நகரில் இருந்து, 2 கி.மீ., தொலைவில் உள்ள புதுத்தோட்டம் பகுதியில், வனவிலங்குகள் அதிகமுள்ளன. இந்த வழியாக, இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள், வாகனங்களை மெதுவாக இயக்க வேண்டும்.
சிறுத்தை, யானை இருப்பதை அறிந்தால், மிகக்கவனமாக இருக்க வேண்டும். அவை இருக்கும் இடத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும். மலைப்பாதையில், வனவிலங்குகள் நடமாட்டமுள்ள பகுதியில், எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டும். வனவிலங்குகளை துன்புறுத்தக்கூடாது,'' என்றார்.