திருப்பூர்,:திருப்பூரில், 'காம்பாக்டிங், வாஷிங்' நிறுவனத்தில் வாயு கசிந்ததால், 20 பேர் மயக்கமடைந்தனர்.
திருப்பூர், வெங்கமேடு, திருக்குமரன் நகரில் செயல்படும் காம்பாக்டிங் மற்றும் வாஷிங் நிறுவனத்தில், நேற்று முன்தினம் நள்ளிரவில் வாயு கசிந்து அப்பகுதியில் பரவியது.
நேற்று காலை அப்பகுதியைச் சேர்ந்த 15 சிறுவர் - சிறுமியர், மூன்று பெண்கள் உட்பட, 20 பேருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கலெக்டர் கிறிஸ்துராஜ், மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் உள்ளிட்டோர் ஆலையில் ஆய்வு நடத்தினர்.
உடனடியாக மூன்று மருத்துவ குழு விரைந்து, அப்பகுதியில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. மாசு கட்டுப்பாடு வாரியத்தினர், ஆலையில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட மற்றும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர். ஆய்வு முடிவு வெளியாகும் வரை, ஆலை இயங்க தடை விதிக்கப்பட்டது.
கமிஷனர் பவன்குமார் கூறுகையில், ''ஆலையில் வாயுக்கசிவு எங்கிருந்து ஏற்பட்டது; என்ன வாயு கசிந்தது என்பது குறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது. ஆய்வறிக்கை அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்றார். ஆலைக்கு சீல் வைக்கவும், மின் இணைப்பைத் துண்டிக்கவும் கலெக்டர் கிறிஸ்துராஜ் நேற்று இரவு உத்தரவிட்டார்.