மதுரை:மதுரை குணாளன் என்பவருக்கு நுகர்பொருட்களை விற்கும், 'கணேஷா ஸ்டோர்' என்ற பெயரில் பல கடைகள் உள்ளன. இங்கு பொருட்களை விற்றதில் வரி ஏய்ப்பு செய்ததாக ஜி.எஸ்.டி., அதிகாரிகள் சோதனை நடத்தி ஆவணங்கள், வவுச்சர்களை எடுத்துச் சென்றனர்.
ஆய்வில், முதற்கட்டமாக, 1.40 லட்சம் ரூபாய் வரி ஏய்ப்பு செய்தது தெரிந்தது. அதை குணாளன் தரப்பினர் செலுத்தினர்.
தொடர் விசாரணையில், பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக கூறி, உடனே செலுத்தும்படி அதிகாரிகள் கூறினர். குணாளன் தரப்பினர் மறுத்தனர்.
குணாளன், அவரது மகன் கதிரேசன், உறவினர் சக்கரவர்த்தி ஆகியோர் ஜி.எஸ்.டி., அலுவலகத்தில் சிறை வைக்கப்பட்டனர். இதையறிந்த நுகர்பொருள் வியாபாரிகள் சங்கத்தினர், வள்ளுவர் காலனி ஜி.எஸ்.டி., அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.
நேற்று மாலை ஜி.எஸ்.டி., இயக்குனரக நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் குணாளன் உட்பட மூவரையும் கைது செய்தனர்.