வேலுார்:வேலுார் அருகே ஊர் நாட்டாமையை தேர்வு செய்வதில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், தி.மு.க.,வைச் சேர்ந்த பஞ்., தலைவரின் காதைக் கடித்து காயப்படுத்தி, மண்டை உடைக்கப்பட்டது.
வேலுார் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த ஊனை பஞ்.,க்கு உட்பட்ட பெரிய ஊனை மலையில் ஆண்டுதோறும் எல்லை அம்மன் தெய்வத்தை வழிபடுவது வழக்கம்.
கடந்த, 4ல் விழா முடிந்ததும், ஊர் நாட்டாமைகளை மாற்றுவது வழக்கம். அதன்படி, ஊர் நாட்டாமைகளை தேர்வு செய்யும் பணி நடந்தது.
இதில், தி.மு.க.,வைச் சேர்ந்த பஞ்., தலைவர் துரை பாபு தரப்பினருக்கும், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் பஞ்., தலைவர் கேசவன் தரப்பினருக்கும் இடையே, தங்கள் ஆதரவாளர்களை நியமிக்க வலியுறுத்தி வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது.
இதில், ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். தி.மு.க., பஞ்., தலைவர் துரைபாபுவின் மண்டை உடைக்கப்பட்டு, காதையும் கடித்து காயப்படுத்தினர். இதில், இரு தரப்பையும் சேர்ந்த, 10 பேர் காயமடைந்தனர். அணைக்கட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.