கிருஷ்ணகிரி:தனியார் நிறுவனத்தில், 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், 100 நாட்களில், 1.80 லட்சமாக திருப்பி தருவதாக கூறி, 8-0 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி அடுத்த பெருகோபனப்பள்ளி ஞானவேல், பெங்களூரு, சிக்கசந்திரா பிரேமா மற்றும் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர், நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு:
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மோளையானுாரைச் சேர்ந்த சகோதரர்கள் அருண்ராஜா, ஜெகன், தர்மபுரியை தலைமையிடமாக கொண்டு, 2021 நவம்பரில், 'பர்பெக்ட் விஷன்' என்ற சீட்டு கம்பெனி நடத்தினர்.
அவர்கள், 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், நாள் ஒன்றுக்கு, 1,800 ரூபாய் வீதம், 100 நாட்களில், 1.80 லட்சம் ரூபாயாக திருப்பித் தரப்படும் என, ஆசை வார்த்தை கூறி, கவர்ச்சிகர விளம்பரம் வெளியிட்டனர்.
நம்பிய நாங்கள், 1,000க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களால், 200 கோடி ரூபாய்க்கும் மேல் பண முதலீடு செய்யப்பட்டது.
அதை ரியல் எஸ்டேட், கட்டுமான தொழில், டிரேடிங் செய்து, லாபம் தருவதாக உறுதி அளித்தனர்.
அதன்படி, 2022 மே, 26 வரை முதலீடு செய்தவர்களுக்கு லாப தொகை வழங்கப்பட்டது.
பின், அந்த நிறுவனத்தினரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்களது அனைத்து அலுவலகங்களும் மூடப்பட்டன.
கிருஷ்ணகிரி கலெக்டர், எஸ்.பி., தர்மபுரி பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
எங்களை ஏமாற்றிய அருண்ராஜா, ஜெகன், வேறு பெயரில் புதிய நிறுவனம் துவங்கி, அதில் முதலீடு செய்தால், பழைய முதலீடுகளையும் சேர்த்து லாபத்தை தருவதாக விளம்பரப்படுத்தி வருகின்றனர்.
ஏற்கனவே நாங்கள் முதலீடு செய்த தொகையில், 80 கோடி ரூபாய் வழங்காமல் ஏமாற்றியவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கவில்லை.
அவர்களுக்கு, போலீசில் பணியாற்றும் சில உறவினர்கள் உறுதுணையாக உள்ளனர் என்ற சந்தேகம் உள்ளது. விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறி உள்ளனர்.