கோவை: ''தமிழ்நாட்டில் ஸ்மார்ட் சிட்டி பணிகள், 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ளன,'' என, நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா தெரிவித்தார்.
கோவை வந்த நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, மாநகராட்சி கிழக்கு மண்டலம் பகுதியில் ரோடுகளை, ஆய்வு செய்தார்.
அதன் பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
கோவை மாநகராட்சியில் மட்டும், 2500 கி.மீ., தூரத்திற்கு ரோடுகள் உள்ளன. பாதாள சாக்கடை திட்டம் நடைபெற்றதால், பல ரோடுகள் சேதம் அடைந்தன.
கடந்த 2 ஆண்டு நிதியை கொண்டு, 563 கி.மீ., ரோடுகள் சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 86 கி.மீ., முழுமையாக பணிகள் முடிந்துள்ளன.
300 கி.மீ., பணிகள், பல்வேறு கட்ட நிலைகளில் உள்ளன. இரண்டு மாதங்களில் இவை நிறைவு பெறும். பழுதடைந்த ரோடுகளை வரும் செப்.,க்குள் முடிக்க திட்டம் வகுத்துள்ளோம்.
ஸ்மார்ட் சிட்டி பணிகள் 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ளன. நகர பகுதிகளில் விளம்பர தட்டிகள் வைக்க, புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.