சேலம்:தொழிலதிபரிடம், 1.60 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, பெங்களூரு நிதி நிறுவனம் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
சேலத்தைச் சேர்ந்த விஜய் விக்னேஷ், 40, வெளிநாடு வேலைக்கு ஆட்களை அனுப்பும் நிறுவன ஆலோசகராகவும், வெள்ளி, ஜவுளி தொழிலும் செய்கிறார்.
இவருக்கு, நண்பர் ஜான் மரியா மூலம் பெங்களூருவைச் சேர்ந்த தனியார் நிறுவன நிர்வாக இயக்குனர் பரத்ராஜ், 52, பழக்கம் ஏற்பட்டது.
அவர், 'எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் புதிதாக தொழில் தொடங்கி அதிக லாபம் பெறலாம். சலுகைகளும் கிடைக்கும்' என, கூறியதை நம்பி, விஜய் விக்னேஷ், பல்வேறு தவணையாக, 1.60 கோடி ரூபாய் வரை முதலீடு செய்தார்.
பரத்ராஜ் தெரிவித்தபடி, எந்த தொழிலையும் தொடங்காததோடு, முதலீடு பணத்தை திரும்ப தர மறுத்தார். விஜய் விக்னேஷ், சேலம் வடக்கு சரக துணை கமிஷனர் கவுதம் கோயலிடம் அளித்த புகாரில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.