சின்னாளபட்டி:திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டோர பள்ளத்தில் பாய்ந்ததில் தம்பதி பலியாகினர்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியம், 68. இவரது மனைவி பரமேஸ்வரி, 60. இவர்களது மகன்கள் மணிகண்டன், 40, பிரபு, 32, ஆகியோருடன் காரில் மதுரை வந்தனர். பிரபு காரை ஓட்டினார்.
திண்டுக்கல்- - மதுரை நான்கு வழிச்சாலையில், சின்னாளப்பட்டி அடுத்த அம்பாத்துறை அருகே நேற்று மதியம், 3:30 மணிக்கு வந்த போது, கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை தடுப்பில் மோதி ரோட்டோர பள்ளத்தில் பாய்ந்தது.
பராமரிப்பின்றி இருந்ததால், கார் ஏர் பலுான் வெடித்ததில், பரமேஸ்வரி இறந்தார். காயமடைந்த பிரபு உட்பட மூவரையும் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழியில் பாலசுப்ரமணியம் இறந்தார். அம்பாத்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.