சிவகாசி:விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளில் உரிய விதிமுறைகள் கடைபிடிக்கப்படாமல் உள் குத்தகைக்கு விடப்படுவதால் விபத்து, உயிர் பலிகள் ஏற்படுகின்றன.
சிவகாசி, சாத்துார், வெம்பக்கோட்டை, விருதுநகர் பகுதியில் நாக்பூர், டி.ஆர்.ஓ., சென்னை உரிமம் பெற்ற 1070 பட்டாசு ஆலைகள் உள்ளன. பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்படுவது இயல்புதான். பெரிய பாதிப்பு ஏற்படாத விதத்தில் தான் ஆலைகளின் அமைப்பும் இருக்கும். ஆனால் சில ஆலைகள் உள் குத்தகைக்கு விடப்படுவதால் விபத்து ஏற்படும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
ஆலைக்கு உரிமம் பெற்ற ஒருவர், தனது ஆலையை மற்றவருக்கு குத்தகைக்கு விடுவது வழக்கம். ஆனால் குத்தகைக்கு எடுத்த நபர் ஆலையில் உள்ள அறைகளை பலருக்கு தனித்தனியாக உள் குத்தகைக்கு விடுகிறார்.
உதாரணமாக நாக்பூர் உரிமம் பெற்ற பட்டாசு ஆலையில் குறைந்தது 40 அறைகள் இருக்கும். இந்த 40 அறைகளுமே வெவ்வேறு நபர்களுக்கு குத்தகைக்கு விடப்படுகிறது. பட்டாசு தயாரிக்கும் அறையில் நான்கு பேர் மட்டுமே இருக்க வேண்டும். மணி மருந்து அலசும் அறையில் இருவர் மட்டுமே இருக்க வேண்டும்.
ஆனால் அறைவாரியாக குத்தகை பெறுவோர் இந்த விதிமுறைகளை கடைபிடிப்பதில்லை. உள் குத்தகைக்கு எடுத்தவர்கள் அதிகம் உற்பத்தி செய்தவற்காக அதிக ஆட்களை வைத்து அதிக மருந்துகளை பயன்படுத்தி பட்டாசு தயாரிக்கின்றனர்.
மேலும் ஆலைக்கு உள்ளே மரத்தடியில் பாதுகாப்பின்றி பட்டாசு உற்பத்தியும் நடக்கிறது. இதுபோல் விதிமீறல் ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தினக்கூலி அதிகமாக தரப்படுகிறது. விபத்து ஏற்படும் என தெரிந்தும் கூடுதல் சம்பளத்திற்காக தொழிலாளர்கள் வேலைக்கு செல்கின்றனர்.
சமீபத்தில் தாயில்பட்டி அருகே கனஞ்சாம்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்திற்கு உள்குத்தகைக்கு விடப்பட்டதே காரணம். அதே போல் ஏழாயிரம்பண்ணை, விளாம்பட்டி அருகே நடந்த வெடி விபத்திற்கும் விதிமீறலே காரணம்.
ஆலைகளில் அவ்வப்போது ஆய்வு செய்யும் அதிகாரிகளுக்கு இந்த தவறுகள் தெரிந்தும் கண்டுகொள்வதில்லை. எனவே வரும் காலங்களில் விபத்துகளை தவிர்க்க விதிகளை கடைபிடித்து பட்டாசு உற்பத்தி செய்ய ஆலை உரிமையாளர்களும், குத்தகைக்கு எடுத்தவர்களும் முன்வர வேண்டும்.