ராமநாதபுரம்:அம்மா உணவங்களுக்கு சமையல் பொருட்கள், பராமரிப்பு செலவிற்கான தொகை, ஊழியர் சம்பளம், என எதையும் மாநகராட்சி, நகராட்சி நிர்வாகங்கள் வழங்கவில்லை. இதனால் அம்மா உணவகங்கள் மூடும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் 407 அம்மா உணவகங்கள் துவங்கப்பட்டது. இவற்றில் 4000 பேர் வேலை செய்கின்றனர். பஸ் ஸ்டாண்ட், அரசு மருத்துவமனை உட்பட முக்கிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள இந்த உணவகங்களில் இட்லி ரூ.1, தயிர் சாதம் ரூ.3, சாதம் ரூ.5, என குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது. ஏழைகள் பசியாறுகின்றனர்.
அன்றாட சமையலுக்கு தேவையான பருப்பு, எண்ணெய், காய்கறி உள்ளிட்டவற்றிற்கு ஒரு உணவகத்திற்கு தினசரி ரூ.3200 வரை தேவைப்படுகிறது. மாநகராட்சி, நகராட்சிகள் இதற்கான தொகையை வழங்கின.
ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் அம்மா உணவகங்களை பராமரிக்க அதிகாரிகள் முக்கியத்துவம் தருவது இல்லை. தற்போது மாநகராட்சி, நகராட்சிகள் அம்மா உணவகங்களுக்கு நிதி முறையாக வழங்கவில்லை.
அம்மா உணவகங்களில் பழுதாகும் மின்விசிறி, கிரைண்டர், மிக்சியை கூட சரிசெய்து தருவது இல்லை.
நகராட்சி அதிகாரிகள் கூறியது: அம்மா உணவகங்களுக்கு ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீடு செய்கிறோம். ஒரு உணவகத்திற்கு மாதம் ரூ. 1 லட்சம் தேவை. ஆனால் அந்த அளவிற்கு வருமானம் இல்லை. இருப்பினும் பொதுநிதியை பயன்படுத்தி தொய்வின்றி உணவு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம், என்றனர்.
நிதி பற்றாக்குறை, பராமரிப்பின்மை போன்றவற்றால் மூடுவிழாவை நோக்கி அம்மா உணவகங்கள் பயணிப்பதாக பணியாளர்கள் புலம்புகின்றனர்.