விழுப்புரம் : விழுப்புரத்தில், வீட்டு வசதி வாரியம் கையகப்படுத்திய இடத்துக்கு இழப்பீடு வழங்காததால், கலெக்டர் அலுவலகப் பொருட்களை ஜப்தி செய்வதற்கு கோர்ட் ஊழியர்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் கணபதி நகர் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி ராதாம்மாள், 70. இவருக்கு சொந்தமான 2,400 சதுர அடி இடத்தை, கடந்த 1992ம் ஆண்டு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், குடியிருப்புகள் கட்டுவதற்காக கையகப்படுத்தியது. அப்போது, வீட்டு வசதி வாரியத்தினர் தெரிவித்தபடி, கையகப்படுத்திய இடத்துக்கான இழப்பீடு தொகையை வழங்காததால், கடந்த 2001ம் ஆண்டு, ராதாம்மாள் தரப்பில், விழுப்புரம் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என, கடந்த 2005ம் ஆண்டு தீர்ப்பளித்துள்ளது. ஆனால், உரிய இழப்பீடு தொகையை வீட்டு வசதி வாரியம் தாராததால், கடந்த 2013ம் ஆண்டு, ராதாம்மாள் தரப்பில், கோர்ட்டில் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதனை விசாரித்த நீதிமன்றம், ராதாம்மாளுக்கு இழப்பீட்டு தொகையாக, வட்டியுடன் சேர்த்து 4 லட்சத்து 99 ஆயிரத்து 260 ரூபாய், வீட்டு வசதி வாரியம் வழங்க வேண்டும் என, கடந்த ஏப்.10ம் தேதி உத்தரவிட்டது.
இதனை வழங்காத பட்சத்தில், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அசையும் சொத்துக்களான, 5 கம்ப்யூட்டர்கள், 10 பீரோக்கள், 10 மின்விசிறிகள், 10 டேபிள்கள் உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்யும்படி உத்தரவிட்டது.
இதனையடுத்து, ராதாம்மாள் தரப்பினர், அவர்களது வக்கீல்கள் தனராஜன், ராஜகுமாரன் மற்றும் நீதிமன்ற கட்டளை நிறைவேற்றுனர்களுடன், நேற்று பிற்பகல் 11:00 மணிக்கு, விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் வந்து ஜப்தி நோட்டீசை காண்பித்தனர்.
அப்போது, கலெக்டர் இல்லாததால், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஹரிதாஸ் மற்றும் அதிகாரிகளிடம் பேசினர். அதிகாரிகள் அவகாசம் கோரியதன் பேரில், நீதிமன்ற ஊழியர்கள், ஜப்தி நடவடிக்கையை ஒத்திவைப்பதாக கூறிச்சென்றனர்.