விக்கிரவாண்டி : கரும்பு சாகுபடியில் இளம் குருத்து பூச்சி தாக்குதலை எப்படி கட்டுப்படுத்துவது என ராஜ் ஸ்ரீ சுகர்ஸ் கரும்பு விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
முண்டியம்பாக்கம் ராஜ் ஸ்ரீ சுகர்ஸ் கரும்பு ஆராய்ச்சி மற்றும்அபிவிருத்தி நிலையம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை:
கரும்பு சாகுபடியில் இளம் கரும்பு பயிரை தாக்கி சேதப்படுத்தும் பூச்சிகளில் இளங்குருத்து பூச்சியும் ஒன்றாகும். இந்த பூச்சியானது 35 டிகிரி செல்சியஸ் மேலுள்ள வெப்பநிலை காலங்களில் 30 முதல் 90 நாட்கள் வரை அதிகம் தாக்கி சேதத்தை ஏற்படுத்துகிறது.
பூச்சி தாக்குதலின் அறிகுறிகளாக கரும்பு பயிரின் நடுக்குருத்து காய்ந்து காணப்படும். இதனால் நடுக்குருத்து பகுதியை பிடுங்கினால் எளிதில் வந்துவிடும். பயிரின் வளர்ச்சி வெகுவாக பாதிக்கப்பட்டு பயிரின் எண்ணிக்கை குறைந்து ஆங்காங்கே திட்டு திட்டாக ச் காணப்படும்.
இப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த காய்ந்த குருத்துகளை கையால் பறித்து வயலுக்கு வெளியே அப்புறப்படுத்தவேண்டும். தற்போது கோடைகாலம் என்பதால் வயலில் ஈரப்பதம் குறையாமல் இருக்குமாறு நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். ஊடுபயிர் சாகுபடியை மேற்கொள்வதன் மூலம் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
ஒரு ஏக்கருக்கு தேவையான குளோரோன்டி ரினிப்பரோல் மருந்தினை பயிரின் வளர்ச்சிக்கு ஏற்ப 150 மில்லி மருந்தினை 400 லிட்டர் தண்ணீரில் கலந்து கரும்புத் தோகையில் நன்கு நனையும்படி தெளிக்கவேண்டும்.
ஒரு ஏக்கருக்கு 8 இனக்கவர்ச்சி பொறிகளை வைத்து தாய் அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிப்பதன் மூலம் இப் பூச்சி தாக்குதலை வெகுவாக குறைக்கலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.