செஞ்சி, விபத்து வழக்கில் நஷ்ட ஈடு வழங்காததால் கோர்ட் ஊழியர்களால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலுாரைச் சேர்ந்த முனுசாமி மகன் மணிகண்டன், 23; இவர் கடந்த 12.12.2011 அன்று, தனது இருசக்கர வாகனத்தில் ஆலம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் மோதியதில், பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து மணிகண்டனின் தந்தை முனுசாமி கொடுத்த புகாரின் பேரில் அரகண்டநல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வந்தனர். தனது மகன் இறப்பிற்கு நஷ்ட ஈடு கேட்டு முனுசாமி, வழக்கறிஞர் கிருஷ்ணன் மூலம் செஞ்சி சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி கடந்த 4 .12.2018ம் தேதி, ரூ. 6 லட்சத்து 56 ஆயிரத்து 40 நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டார். ஆனால் 2022ம் ஆண்டு வரை நஷ்ட ஈடு வழங்காததால், அப்போதைய நீதிபதி, மீண்டும் வட்டியுடன் சேர்த்து ரூ. 12 லட்சத்து 7 ஆயிரத்து 656 யை , பாதிக்கப்பட்ட நபருக்கு வழங்க உத்தரவிட்டார்.
அப்போது கோர்ட்டில் செலுத்தி இருந்த டெபாசிட் தொகை உள்பட 10 லட்சத்து 70 ஆயிரத்து 983 நஷ்ட ஈடு வழங்கப்பட்டது. மீதி தொகை ரூ. ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 901 இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் மீண்டும் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி நலினகுமார், ரூ. ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 901 உடன் வட்டியும் சேர்த்து வழங்குமாறும், தவறினால் அரசு பஸ்ஸை ஜப்தி செய்யவும் உத்தரவிட்டார்.
அதன்பேரில் நேற்று புதுச்சேரியில் இருந்து திருவண்ணாமலைக்கு சென்ற அரசு பஸ்சை, செஞ்சி கூட்டு ரோடில் கோர்ட் ஊழியர்கள் ஜப்தி செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.