விழுப்புரம், : டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி, பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் அடுத்த சாலாமேடு பகுதியில் உள்ள ரயில்வே கேட் அருகே டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் மது வாங்கி அருந்தும் பலர், அவ்வழியே செல்லும் போது தடுமாறியபடி வாகனத்தை ஓட்டிச் செல்கின்றனர். இதனால், அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதியடைந்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைக்கு வந்து சென்ற ஒரு குடிமகன், நடந்து சென்ற நபர் மீது வாகனத்தை மோதியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சாலாமேடு பகுதியில் வசிக்கும் பெண்கள் 50 பேர் திரண்டு, நேற்று இரவு 7:30 மணியளவில் திடீரென டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி முற்றுகையிட்டனர். அதையடுத்து டாஸ்மாக் கடை மூடப்பட்டதால் மக்கள் கலைந்து சென்றனர்.
அரை மணிநேரத்திற்கு பிறகு மீண்டும் கடையை திறக்கப்பட்ட மது விற்பனை நடந்தது. இதையறிந்து திரண்டு வந்த மக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த விழுப்புரம் டவுன் டி.எஸ்.பி., சுரேஷ், தாலுகா இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பொதுமக்களை சமாதானம் செய்தனர். அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக டி.எஸ்.பி., சுரேஷ் உறுதியளித்தார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு, கலைந்து சென்றனர்.