சிறை வார்டன் மீது வழக்கு
மதுரை: ஜெய்ஹிந்த்புரம் பாண்டியம்மாள் 65. இவரது கணவர் கண்ணன். இருவரும் வாங்கிய கடனுக்காக நில ஆவணங்களை தரமறுப்பதாக மதுரை சிறை வார்டன் செந்தில்குமார், ஜோசப் ஆரோக்கியசாமி, திருப்பதி மீது ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
நீதிமன்றத்தில் இருந்து ஓட்டம்
மதுரை: இரண்டாவது கூடுதல் போதை பொருள் தடுப்புப்பிரிவு நீதிமன்றத்தில் 'வாழைப்பழ'சரவணகுமார் என்பவர் வழக்கு ஒன்றில் சரணடைந்தார். நீதிமன்ற காவலில் இருந்தபோது அங்கிருந்து தப்பினார். நீதிமன்ற ஊழியர் அமராவதி புகாரில் அண்ணாநகர் போலீசார் தேடி வருகின்றனர்.
பெயின்டருக்கு பாட்டில் குத்து
மேலுார்: நரசிங்கம்பட்டி பெயின்டர் வாஞ்சிநாதன் 22. இவருக்கும், அப்பகுதி உதயகுமார், முத்துபாண்டி, கார்த்திக்கும் பணம் கொடுங்கல் வாங்கல் பிரச்னை இருந்தது. நேற்றுமுன்தினம் சுடுகாடு பகுதியில் வாஞ்சிநாதனிடம் தகராறு செய்து பீர் பாட்டிலால் முகம், கையில் குத்தினர். எஸ்.ஐ., ஆனந்தஜோதி விசாரிக்கிறார்.
குட்கா, புகையிலை பறிமுதல்
திருமங்கலம்: ஆலம்பட்டி சின்னச்சாமி 38. இவரது வீட்டில் திருமங்கலம் தாலுகா போலீசார் சோதனை நடத்தி 12 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். சின்னசாமி கைது செய்யப்பட்டார். மேலும் திருமங்கலம் முனியாண்டி கோயில் சிவசேகர் என்பவர் வீட்டில் பதுக்கிய 5 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.
தொழிலாளி பலி
கொட்டாம்பட்டி: மங்களாம்பட்டி விவசாய கூலித் தொழிலாளி சிவராமன் 22. நேற்று காலை 11:00 மணிக்கு டூவீலரில் மதுரை - மங்களாம்பட்டிக்கு சென்றார். ஹெல்மெட் அணியவில்லை. தெற்குத்தெரு நான்கு வழிச்சாலையில் பின்னால் வந்த வாகனம் மோதியதால் சிவராமன் இறந்தார். மேலுார் எஸ்.ஐ., ஆனந்த ஜோதி விசாரிக்கிறார்.