சென்னை: இன்ஜினியரிங் கவுன்சிலிங் தரவரிசைக்கு, 10ம் வகுப்பு மதிப்பெண்ணை கணக்கில் கொள்வதை தவிர்க்கும்படி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., -- பி.டெக்., முதலாம் ஆண்டு சேர்க்கைக்கு, ஜூலையில், 'ஆன்லைன்' வழி கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.
சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முடிந்ததும், பிளஸ் 2 பொது தேர்வில், கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் கணினி அறிவியல் இணைந்த, 'கட் ஆப்'மதிப்பெண் அடிப்படையில், மாணவர்களுக்கு தரவரிசை வழங்கப்பட உள்ளது. இதில், சமமான மதிப்பெண் பெற்றவர்களுக்கு, பிளஸ் 2 மொத்த மதிப்பெண் மற்றும், 10ம் வகுப்பு மொத்த மதிப்பெண் அடிப்படையில், தரவரிசை வழங்கப்படும். இந்த மதிப்பெண்ணும் சமமாக இருந்தால், பிறந்த தேதியில் மூத்தவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

அதிலும் சமமாக இருந்தால், 'ரேண்டம்' எண்ணில் அதிக எண் பெற்றவர்களுக்கு, தரவரிசையில் முன்னுரிமை தரப்படும். கடந்த ஆண்டில், இந்த வகையில், மூன்று பேர் ரேண்டம் எண் பயன்படுத்தி, தரவரிசை பட்டியலில் இடம் பெற்றனர்.
இந்நிலையில், இந்த ஆண்டு இன்ஜினியரிங் படிக்க விண்ணப்பித்த மாணவர்கள், 2020 - 21ம் கல்வி ஆண்டில், 10ம் வகுப்பில் பொது தேர்வு எழுதாமல், 'ஆல் பாஸ்' தேர்ச்சி பெற்றவர்கள். அவர்களுக்கு, 10ம் வகுப்பில் மதிப்பெண் வழங்கப்படவில்லை.
எனவே, இந்த ஆண்டு மட்டும், 10ம் வகுப்பு மதிப்பெண்ணை கணக்கில் கொள்ளாமல், இன்ஜினியரிங் தரவரிசை பட்டியலை தயாரிக்குமாறு, கவுன்சிலிங் கமிட்டிக்கு, தமிழக உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.