திண்டுக்கல்--திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் சட்டவிரோத மது பார்கள் நடத்தியவர்கள் மீது வழக்குபதிவு செய்யவும், அபராத தொகை வசூலிக்கவும், இயலாதவர், ஊனமுற்றோரை கொண்டு நடக்கும் கள்ள மது விற்பனையை தடை செய்யவும் வேண்டி புதிய தமிழகம் கட்சியினர் மாவட்ட செயலாளர் சிவநாதபாண்டியன் தலைமையில் கலெக்டர் பூங்கொடி, எஸ்.பி., பாஸ்கரனிடம் முறையிட்டனர்.
திண்டுக்கல் மாவட்ட புதிய தமிழகம் கட்சி சார்பாக கலெக்டர் எஸ்.பி., அலுவலகத்தில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இயங்கி வந்த 5,500க்கு மேற்பட்ட பார்கள் லைசென்ஸ் இல்லாமல் நடத்தியதில் பெரிய அளவில் அரசுக்கு வருமான இழப்பை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு நடந்த ஊழலின் மதிப்பு ஆண்டுக்கு ரூ. ஒரு லட்சம் கோடி என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி ஆளுனரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
இது சம்மந்தமாக மே 27ல் கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலை, சட்டவிரோத பார்கள் வெளிப்படையாக இயங்கி வருகின்றன.
ஊனமுற்றோர், இயலாதவர்களை பயன்படுத்தி சில மாபியாக்கள் சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். 22 மாதங்களில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது.
ஊழல் தடுப்பு முறைகேடுகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுத்து அபராதம், கைது நடவடிக்கை தொடர வேண்டும் என, குறிப்பிட்டிருந்தனர்.
ஒன்றிய செயலாளர் பொன்னர், மாநகரசெயலாளர் கோபிஆனந்த், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் முருகேசன், கனகராஜ் பங்கேற்றனர்.