சென்னை: அரபிக் கடலில் உருவான, 'பைபோர்ஜாய்' புயல், மிக தீவிர புயலாக மாறியுள்ளது. அரபிக்கடல் மற்றும் வங்க கடலுக்கு மீனவர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம், நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, ஜமுனா மாத்துாரில், 5 செ.மீ., மழை பெய்துள்ளது. தமிழக பகுதியில் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதனால், தமிழகம், புதுச்சேரியில், சில இடங்களில் இன்று மிதமான மழை பெய்யும்.
அரபிக்கடலில் உருவான பைபோர்ஜாய் புயல், நேற்று காலை மிக தீவிர புயலாக வலுப் பெற்றுள்ளது. கோவாவில் இருந்து, 970 கி.மீ., - மும்பையில் இருந்து, 1,050 கி.மீ., தொலைவில், கேரளா மற்றும் கர்நாடகாவுக்கு இடைப்பட்ட பகுதியில் இருந்து, அரபிக் கடலில் வடக்கு நோக்கி நகர்கிறது.
மணிக்கு, 145 கி.மீ., வேகம் வரை சூறாவளி காற்று வீசுவதால், மீனவர்கள் அரபிக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம். ஆழ்கடல் பகுதியில் உள்ளவர்களும், அவசரமாக கரை திரும்ப வேண்டும்.
வங்கக் கடலின் மன்னார் வளைகுடா, குமரி கடல் மற்றும் தமிழக தென் மாவட்ட கடலோர பகுதிகளில், மணிக்கு, 65 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசுகிறது. எனவே, இன்று முதல், 10ம் தேதி வரை, மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரியில், நேற்றும் கோடை வெப்பம் வழக்கம் போல் கடுமையாக நிலவியது. அதிகபட்சமாக பாளையங்கோட்டை, திருச்சி, திருத்தணி, கரூர் பரமத்தியில், 40 டிகிரி செல்ஷியஸ், 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
திருப்பத்துார், ஈரோடு, துாத்துக்குடி, வேலுார், 39; சென்னை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், தர்மபுரி, மதுரை, நாமக்கல், தஞ்சாவூர், 38 டிகிரி செல்ஷியஸ், அதாவது, 14 இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவானது.
விமானம் ரத்து
சென்னை விமான நிலையத்தில் இருந்து, அந்தமான் செல்லும் இண்டிகோ விமானம் நேற்று பகல், 12:00 மணிக்கு, 150க்கும் மேற்பட்ட பயணியருடன் புறப்பட்டது. அந்தமான் விமான நிலையத்தை விமானம் நெருங்கிய போது, சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.
இதனால், விமானம் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து வானில் வட்டமடித்த விமானம், மீண்டும் சென்னைக்கு திரும்பியது.
இதையடுத்து, 'அந்தமானில் வானிலை மோசகமாக இருப்பதால், விமானம் ரத்து செய்யப்படுகிறது. அந்தமானுக்கான விமானம் இன்று புறப்படும்' என, இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்தமானில் இருந்து சென்னை வரவேண்டிய விமானமும் நேற்று ரத்து செய்யப்பட்டது.
பைபோர்ஜாய் என்றால் என்ன?
புயல்களின் விளைவுகளை ஆவணப்படுத்த வசதியாக, உலக வானிலை அமைப்பியல் சார்பில், 2019ல் புயல்களுக்கான, 169 பெயர்கள் வழங்கப்பட்டன. இந்தியா உள்ளிட்ட, 13 நாடுகள் இந்த பெயர்களை அளித்தன. இதுவரை, 13 நாடுகள் வழங்கிய பெயர்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. தற்போது, 14வது பெயராக, வங்கதேசம் நாடானது, வங்க மொழியில் வழங்கியுள்ள, பைபோர்ஜாய் என்ற பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இதற்கு பேரழிவு அல்லது பேரிடர் என்று பொருள்.