வேளாண் உழவர் நலத்துறை
சார்பில் விவசாயிகள் மேளா
வேளாண்மை உழவர் நலத்துறையின், தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படும், அஞ்சூர் கிராமத்தில் விவசாயிகள் மேளா நடந்தது.
கொடுமுடி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் யசோதா தலைமை வகித்தார். பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலைய வேளாண் ஆராய்ச்சியாளர் கணேசன், அனைத்து பயிர்களின் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
ஜே.கே.கே.எம். வேளாண் கல்லுாரி உதவி பேராசிரியர் பகவத்சிங், டிஜிட்டல் வேளாண்மை தொழில்நுட்பங்களை கைப்பேசியில் எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி விளக்கமளித்தார். கால்நடை மருத்துவர் பிரகாஷ், கொட்டகை அமைத்து ஆடுகள் வளர்ப்பது, சந்தைப்படுத்தும் முறைகள் குறித்து பேசினார். ஏற்பாடுகளை, வட்டார தொழில்நுட்ப மேலாளர் ரேணுகா, உதவி தொழில் நுட்பமேலாளர்கள் மஞ்சுரேகா, சிதம்பரம் ஆகியோர் செய்திருந்தனர்.
வரும் 23ல் அஞ்சல் துறை
குறைகேட்பு நாள் கூட்டம்
வரும், 23ல் அஞ்சல் துறை குறை கேட்பு நாள் கூட்டம் நடக்க உள்ளது.
இதுபற்றி, ஈரோடு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கருணாகரபாபு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈரோடு அஞ்சல் கோட்டத்தில், அஞ்சல் துறை சேவைகள் குறித்த குறைகள் இருப்பின், பொதுமக்களிடம் இருந்து அவற்றை கேட்டறிந்து, தீர்வு காணும் வகையில் வரும், 23 காலை, 11:00 மணிக்கு, ஈரோடு அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குறைகேட்பு நாள் கூட்டம் நடக்க உள்ளது. பொதுமக்கள், அஞ்சல் துறை குறித்த தங்கள் குறைகளை தபால் மூலம் வரும், 19க்குள் கிடைக்கும்படி, 'அஞ்சல் கண்காணிப்பாளர், ஈரோடு கோட்டம், ஈரோடு - 638001' என்ற முகவரிக்கு, 'குறை கேட்பு நாள் மனு' என குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். தவிர, 19 வரை அலுவலக வேலை நாட்களில் காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை மனுவை நேரிலும் சமர்பிக்கலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
திருமணமான பெண்
விபரீத முடிவு
அந்தியூர் அருகே வேம்பத்தி, தாலக்கெட்டப்புதுாரை சேர்ந்த வீரபத்ரன், 27 கூலி வேலை செய்கிறார். இவரது மனைவி கீர்த்தனா, 24. திருமணமாகி இரு ஆண்டுகளாகிறது. குழந்தைகள் இல்லை. கடந்த சில நாட்களாக, தம்பதியிடையே சண்டை நடந்து வந்துள்ளது.
இதே போல், நேற்று தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் வேதனையுடன் காணப்பட்ட கீர்த்தனா, அருகில் உள்ள விவசாய தோட்டத்திற்கு வேலைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு, அங்கே உள்ள கிணற்றில் குதித்துள்ளார். அந்தியூர் தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் இறங்கி கீர்த்தனாவை சடலமாக மீட்டனர். கீர்த்தனாவிற்கு திருமணமாகி, இரண்டு ஆண்டுகளே ஆவதால் கோபி ஆர்.டி.ஓ., விசாரித்து வருகிறார்.
நாட்டு துப்பாக்கி
வைத்திருந்தவர் கைது
கடம்பூர் அருகே, அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
சத்தியமங்கலம் அடுத்த, கடம்பூர் மலை கிராமம் அத்தியூர் பகுதியில் அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருப்பதாக, கடம்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்த போது, அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி, 69 என்பவர் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டு துப்பாக்கி வைத்திருந்தது விசாரணையில் தெரிய வந்தது. அவரை கைது செய்து, நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
சீரங்ககவுண்டன்பாளையத்தில்நாளை கும்பாபிேஷக விழா
பெருந்துறை ஒன்றியம், துடுப்பதி பஞ்சாயத்து, சீரங்ககவுண்டன்பாளையத்தில் உள்ள செல்வவிநாயகர், மகாமாரியம்மன் கோவில்களின் கும்பாபி ேஷக விழா நாளை காலை, 8:30 மணியளவில் நடைபெறுகிறது. நேற்று காலை கணபதி ேஹாமம், மாலையில் முதல் கால யாக பூஜைகள் நடந்தன. இன்று காலை இரண்டாம் கால யாக பூஜை, கோபுரம் கலசம் வைத்தல், மாலையில் மூன்றாம் கால யாக பூஜை நடைபெறுகிறது. நாளை காலை, 8:30 மணிக்கு கும்பாபிேஷக விழா நடைபெறுகிறது.
அதிகமாக மாத்திரை
சாப்பிட்டவர் சாவு
பவானியை சேர்ந்தவர் மகாலிங்கம், 54, திருமணம் செய்து கொள்ளவில்லை. மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம், மது போதையில் வீட்டிற்கு வந்த மகாலிங்கம், தான் வைத்திருந்த மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டதாக தெரிகிறது. பவானி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மகாலிங்கம், நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.
கோபியில் குடிநீர் குழாய் உடைப்பு
கோபி நகராட்சி குடிநீர் குழாய் கோளாறால், கால்நடை பராமரிப்பு துறையின் பன்முக மருத்துவமனை வளாகத்துக்கு தண்ணீர் புகுந்ததால் வெள்ளக்காடானது.
கோபி, கள்ளிப்பட்டி பிரிவு அருகே சத்தி சாலையில், நகராட்சி சார்பில் குடிநீர் மேல்நிலை தொட்டி அமைந்துள்ளது. அப்பகுதியில் பிரதான குடிநீர் குழாய் உடைந்ததால், சாக்கடையில் ஆறாக பெருக்கெடுத்த தண்ணீர், அருகேயிருந்த கால்நடை பராமரிப்பு துறையின், பன்முக மருத்துவமனை வளாகத்துக்குள் புகுந்தது. இதனால், மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரங்களை சுற்றி, தண்ணீர் சூழ்ந்து நின்றது. தகவலறிந்த கால்நடை பராமரிப்பு துறையினர், கோபி நகராட்சி அதிகாரிகளுக்கு விபரம் தெரிவித்தனர். அதன்பின், நகராட்சி பணியாளர்கள், சம்பவ இடத்துக்கு விரைந்து, பைப் லைனில் இருந்த கோளாறை சரிசெய்தனர்.
பவானி நகராட்சி
ஆணையர் பொறுப்பேற்பு
பவானி நகராட்சி ஆணையாளராக மோகன்குமார் பொறுப்பேற்றுக் கொண்டார்.
பவானி நகராட்சி ஆணையர் பணியை, நகராட்சி பொறியாளர் கதிர்வேல் கூடுதலாக கவனித்து வந்தார். இந்நிலையில், நேற்று பவானி நகராட்சி ஆணையாளராக மோகன்குமார் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன், வெள்ளகோவில் நகராட்சியில் ஆணையாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு பணியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
ஆப்பக்கூடல்
பகுதியில்
பரவலாக மழை
அந்தியூர் அடுத்த ஆப்பக்கூடல், சுக்காநாயக்கனுார், கரட்டுப்பாளையம், ஓசைபட்டி, புதுப்பாளையம், பெருந்தலையூர், செரையாம்பாளையம், கூத்தம்பூண்டி, வெள்ளாளபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்
பகுதிகளில், நேற்று காலையில் இருந்து மாலை வரை வெயில் வாட்டி வதைத்தது. பின், மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு, 3:00 மணியில் இருந்து அரை மணி நேரம் விடாமல் மழை பெய்தது. இதனால் இப்பகுதியில் இதமான சூழல் நிலவியது.
சிமென்ட் பாரம் ஏற்றி வந்த
லாரி கவிழ்ந்து விபத்து
அந்தியூரில் இருந்து, கர்நாடகா மாநிலம், மைசூருக்கு சிமென்ட் பாரம் ஏற்றி சென்ற லாரி, தட்டக்கரை அருகே வேலாம்பட்டி பிரிவில் கவிழ்ந்தது.
பர்கூர் வனப்பகுதி, தட்டக்கரை அருகே வேலாம்பட்டி பிரிவில், நேற்று முன்தினம் சிமென்ட் பாரம் ஏற்றி வந்த லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக சாலையோரத்தில் கவிழ்ந்தது. பர்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, காயமடைந்த லாரி டிரைவரை மீட்டு, பர்கூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்தியூரில் இருந்து சிமென்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு, தவிட்டுப்பாளையத்தை சேர்ந்த, ஆறுமுகம், 52 என்பவர், மைசூருக்கு லாரியை ஓட்டிக்கொண்டு சென்ற போது, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது தெரியவந்தது. பின், வேறொரு லாரி வரவழைக்கப்பட்டு, சிமென்ட்
மூட்டைகள் மாற்றி ஏற்றப்பட்டு பின்னர் லாரி சென்றது.
பட்டதாரி ஆசிரியர்கள் கலந்தாய்வு
நாளை நிறைவு பெறுவதாக தகவல்
பள்ளி கல்வித்துறையில், மே மாதத்தில் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு, பணி உயர்வு கலந்தாய்வு நடந்தது. மாவட்டத்துக்குள்ளும், மாவட்டம் விட்டு மாவட்டமும் கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடந்தது. பட்டதாரி ஆசிரியர்கள், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கான கலந்தாய்வு கடந்த, 25 முதல் ஆன்லைன் மூலம் நடந்து வருகிறது. நேற்றும் ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் கலந்தாய்வு நடந்தது. பணி மூப்பு அடிப்படையில், தினமும் ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுகின்றனர். கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்கள் மட்டும், பணி மூப்பு அடிப்படையில் அழைக்கப்படுகின்றனர். கலந்தாய்வு நாளை நிறைவு பெறுகிறது.
பிரசவ வார்டு பகுதியில்
இருக்கை வசதி அவசியம்
கோபி அரசு மருத்துவமனை பிரசவ வார்டு பகுதியில், போதிய இருக்கை வசதி அமைக்க, பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோபி அரசு மருத்துவமனையில், பிரசவ வார்டுக்கு வரும் கர்ப்பிணிகளின் உறவினர்கள் மற்றும் அவர்களின் பாதுகாவலர்கள், அங்குள்ள கட்டடத்தின் நிழலில் தரையில் அமருகின்றனர். குறிப்பாக வயதானவர்கள் தரையில் அமர முடியாமல் அவதியுறுகின்றனர். அதேசமயம் வெயில் காலத்தில் இன்னும் அவர்கள் அவதியுற வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம், போதிய இருக்கை வசதிகளை செய்து தர வேண்டும்.
செல்லாண்டியம்மன்
கோவில் கும்பாபிஷேகம்
அந்தியூர் அருகே காட்டூரில் விநாயகர், முருகன் மற்றும் செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து கொண்டு வந்த புனிதநீரை, செல்லாண்டியம்மன், முருகன் கோவில் கோபுரத்தில் உள்ள கலசத்திற்கு புனித நீரை ஊற்றி வழிபட்டனர். அந்தியூர், காட்டூர், பச்சாம்பாளையம், பள்ளிபாளையம், செம்புளிச்சாம்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து
ஏராளமானோர் கலந்து கொண்டனர்.