கரூர்: தோல் தொழிற்சாலை கழிவுகளால், கரும்பச்சை நிறத்தில் மாறிய அமராவதி ஆற்று தண்ணீரால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கொடைக்கானல் கீழ்மலை பகுதியான புல்லாவெளியில் தோன்றும் குடகனாறு, வேடச்சந்துார் வழியே கரூர் மாவட்டம் வரை செல்கிறது. திண்டுக்கல் மாவட்டம், வேடச்சந்துார் அழகாபுரியில் குடகனாற்றின் குறுக்கே, 27 அடி உயரமுள்ள அணை உள்ளது.
இங்கிருந்து இரு கிளை வாய்க்கால்கள் மூலம் திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில், 9,000 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இந்நிலையில், குடகனாறு ஆணையில் இருந்த திறக்கப்படும் தண்ணீரில், ரசாயன கழிவுநீர் வருவதால் அமராவதி ஆறு பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து, விவசாயிகள் விழிப்புணர்வு இயக்க கரூர் மாவட்ட தலைவர் செல்வராஜ் கூறியதாவது: திண்டுக்கல் உள்பட சுற்றுப்பகுதி தனியார் ஆலைகள் மூலம் தேக்கி வைக்கப்பட்ட ரசாயன கழிவுநீரை திறந்து விட்டதால், ஆற்று நீர் நிறம் மாறி கரும்பச்சை நிறமாகி விட்டது. அதிகமான நுரை பொங்கி, தண்ணீரில் துர்நாற்றம் வீசியதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதோடு ஆற்றின் வழி நெடுகிலும் மீன்கள் செத்து
மிதக்கின்றன.
இந்நிலையில், கரூர் மாவட்டம் கொடையூர் அமராவதி ஆற்றில் குடகனாறு கலக்கிறது, இதனால் ஆற்றில் தேங்கிக்கிடக்கும் சுகாதாரமற்ற தண்ணீர், மேலும் கெட்டு கரும்பச்சை நிறமாகி வருகிறது. அந்த நீரை குடிநீருக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருந்தும் வேறு வழியின்றி தண்ணீர் உபயோகப்படுத்தவதால், தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது.
விவசாய சங்கங்கள் போராட்டம் அறிவித்த நிலையில், அணையில் தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது. கழிவுநீர் கலந்தவர்கள் மீது மாவட்ட நிர்வாகம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. தயவு தாட்சண்யம் இன்றி ஆற்றில் கழிவுநீரை கலந்து விடும் ஆலைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.