கரூர்: கரூர் மாவட்டம், 2022-23 நிதியாண்டில், 6,670 கோடி ரூபாய் ஏற்றுமதி நடந்த நிலையில், மாநில அளவில் எட்டாம் இடம் பிடித்துள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்கு ஜவுளி ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள், 600க்கும் மேற்பட்டவை உள்ளன. இங்கு ஸ்கிரீன், தலையணை உறைகள், மேஜை விரிப்புகள், கைகுட்டை, சோபா விரிப்பு, துண்டு ஆகியவை உற்பத்தி செய்யப்படுகிறது. இவை பிரான்ஸ், ஜெர்மன், இங்கிலாந்து, இத்தாலி, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதேபோல் கொசுவலை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மத்திய அரசின் தகவல் அடிப்படையில், மாநில அரசு, மாவட்டம் வாரியாக ஏற்றுமதி வர்த்தக விபரங்களை பராமரிக்கிறது. கடந்த நிதியாண்டுக்கான, 2022-23 ஏற்றுமதி வர்த்தக விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் மாநில அளவில், காஞ்சிபுரம் முதலிடம், சென்னை இரண்டாமிடத்திலும் இருக்கிறது. எட்டாவது இடத்தை கரூர் மாவட்டம் பிடித்துள்ளது. இதில், 2021-22ல், 7,558 கோடியாக இருந்த ஏற்றுமதி, 843 கோடி ரூபாய் சரிந்து, 2022-23 நிதியாண்டில், 6,670 கோடி ரூபாயாக உள்ளது. 10வது இடத்தில் உள்ள ஈரோடு மாவட்டம், 2021-22ல், 4,204 கோடி ரூபாயாக இருந்த ஏற்றுமதி, 2022-23 நிதியாண்டில், 4,286 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த நிதியாண்டை விட, 82 கோடி ரூபாய் அதிகம். 13ம் இடத்தில் உள்ள சேலம், 2021-22ம் ஆண்டில், 3,563 கோடியாக இருந்த வர்த்தகம், 2022-23ல், 3,182 கோடியாக உள்ளது. இது, கடந்த நிதியாண்டை காட்டிலும், 381 கோடி ரூபாய் குறைவு. மாநில அளவில், 19வது இடத்தில் உள்ள நாமக்கல், 2021-22ம் ஆண்டில், 1,353 கோடியாக இருந்த வர்த்தகம், 2022-23ல், 1,244 கோடியாக உள்ளது. இது, கடந்த நிதியாண்டை காட்டிலும், 109 கோடி ரூபாய் குறைவாகும்.