நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அருகே, ஓய்வு பெற்ற அரசு ஊழியரை அடித்து கொலை செய்த வழக்கில், போதை வாலிபரை போலீசார் கைது செய்தனர்.நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அடுத்த, புதுப்பட்டி காமராஜ் நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் சுப்ரமணி, 70; இவர் கடந்த திங்கட்கிழமை இரவு, வீட்டுக்கு வெளியே துாங்கி கொண்டிருந்த போது, மர்ம நபரால் அடித்து கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
நாமகிரிப்பேட்டை போலீசார், அதே பகுதியை சேர்ந்த பழனிசாமி மகன் பெயின்டர் அருண்குமார், 20, என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், சுப்ரமணியை கட்டையால் தாக்கி கொலை செய்தது, அருண்குமார் என்பது தெரியவந்ததையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
குடிக்கு அடிமையான அருண்குமார், சுப்பிரமணி துாங்கிக் கொண்டிருந்தபோது, அவ்வப்போது அவரது சட்டை பையிலிருந்து பணத்தை திருடி, மது குடித்து வந்தார். இதேபோல், கடந்த திங்கட்கிழமை இரவு, பணத்தை திருட முயற்சித்தபோது, சுப்ரமணியிடம் கையும் களவுமாக மாட்டிக்கொண்டார். இதுகுறித்து யாரிடமாவது தன்னை காட்டி கொடுத்து விடுவார் என, பயந்த அருண்குமார், கட்டையால் சுப்ரமணியின் தலையில் தாக்கி கொலை செய்துள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கொலை நடந்து, 24 மணி நேரத்தில் குற்றவாளியை பிடித்த நாமகிரிப்பேட்டை போலீசாரை, நாமக்கல் எஸ்.பி., ராஜேஷ் கண்ணன்
பாராட்டினார்.