சாலையில் குவியும் குப்பை
தொடர்ந்து வீசும் துர்நாற்றம்
சாலையில் குவியும் குப்பையால், அரசு காலனி
பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.
கரூர், -சேலம் பழைய சாலை அரசு காலனி அருகில் குப்பை பல நாட்களாக தேங்கியுள்ளது. இதை தினமும் அள்ளி அப்புறப்படுத்த, பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும், சாலையோரங்களில், குவிந்திருக்கும் குப்பையால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். குப்பை அள்ளப்படாததால், தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. சாலையோரம் கொட்டப்படும் குப்பையை தினமும் அள்ளி அப்புறப்படுத்த வேண்டும்.
தண்டவாளத்தை கடக்கும்
மக்களின் உயிருக்கு ஆபத்து
தண்டவாளத்தை கடந்து செல்லும், பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து காத்திருக்கிறது. கரூர்-திண்டுக்கல் ரயில் பாதை, வடக்கு காந்திகிராமம் வழியாக செல்கிறது. அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், ரயில் தண்டவாளத்தை கடந்துதான் மற்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டி உள்ளது. இதனால், அவர்கள் அடிக்கடி தண்டவாளத்தை கடக்கின்றனர். தற்போது, கரூர் - திண்டுக்கல் ரயில் வழித்தடம் மின்மயமாக்கப்பட்டுள்ளது. இதனால், தண்டவாளத்தை கடந்து செல்லும்போது, ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. பாதுகாப்பற்ற முறையில் தண்டவாளங்களை கடந்து செல்பவர்களிடம், ரயில்வே துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும்
குளங்களை துார்வார வேணும்
பொதுமக்கள் எதிர்பார்ப்பு
அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பஞ்சாயத்துகளில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் மழை நீர் சேகரிக்க குளம் அமைக்கப்பட்டது. மழைக்காலத்தில் குளத்தில் தண்ணீர் விழும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இதனால், இக்குளங்களில் மழை காலத்தில் நீர் சேகரமாகி அப்பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தது. தற்போது, குளங்கள் பெரும்பாலும் துார்ந்து போய், மணல் மூடி முட் செடிகள் வளர்ந்து காடாக காட்சியளிக்கிறது. குளங்களை சீரமைத்து, துார் வாரி மழைக்காலத்துக்குள் தண்ணீர் சேமித்து கிராம மக்கள் பயனடையும் வகையில், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.