நாமக்கல்: அடிப்படை வசதி செய்து தரக்கோரி, கொண்டிசெட்டிப்பட்டி, நகர்ப்புற அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த மக்கள், நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
இதுகுறித்து, அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
நாமக்கல்--மோகனுார் சாலை, கணபதி நகர் பகுதியில் உள்ள நகர்ப்புற அடுக்குமாடி குடியிருப்பில், 900க்கும் மேற்பட்ட வீடுகளில், 590 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டால், தீயணைப்பு துறை வாகனம் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் வந்து செல்ல போதிய பாதை வசதி இல்லை. குடிநீர் வசதி, சாக்கடை வடிகால் அடைப்பு, அதனால் ஏற்படும் கொசுத்தொல்லை ஆகிய பிரச்னைகள் அதிகமாக உள்ளன.
ஓட்டுரிமை உள்ள எங்களுக்கு, எந்த ஓட்டுச்சாவடியில் ஓட்டளிக்க வேண்டும் என்பதை, தேர்தலுக்கும் முன்பே அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும். மேலும், தகுதி இல்லாத சில நபர்கள் சங்கம் அமைத்து, மாதம், 250 ரூபாய் வசூல் செய்கின்றனர். அதுகுறித்தும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று காலை போராட்டம் நடத்த முடிவு செய்த குடியிருப்பு மக்களிடம், நாமக்கல் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்ததையடுத்து அங்கிருந்து சென்றனர்.