நாமக்கல்: நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட தும்மங்குறிச்சி, பெரியகுளம், கிருஷ்ணாபுரம், காவெட்டிப்பட்டி, போதுப்பட்டி, முல்லைநகர், கொசவம்பட்டி, முதலைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை, கலெக்டர் உமா பார்வையிட்டு ஆய்வு
செய்தார்.
நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில், செம்மண்குளம் மேம்பாடு, பெரியூர் குளம் துார்வாரி மேம்படுத்தும் பணி, பூங்கா அமைபக்கும் பணி, முல்லை நகரில், நுாலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டும் பணி. உரப்பூங்காவில், உயிரி அகழாய்வு (பயோமைனிங்) திட்டம், நாமக்கல் நகராட்சி புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணி உள்ளிட்ட, 31.87 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, கலெக்டர் உமா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, நாமக்கல் நகராட்சி அலுவலகத்தகில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்து பேசியதாவது:
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அரசுக்கும், பொதுமக்களுக்கும் இடையே, ஒரு பாலமாக செயல்படக் கூடியவர்கள். அந்த வகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, நகராட்சி அலுவலர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை, நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்த காலத்திற்குள் முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். பொதுமக்களின் அடிப்படை தேவைகளை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நாமக்கல் நகராட்சி தலைவர் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி, கமிஷனர் சென்னுகிருஷ்ணன், பொறியாளர் சுகுமார், தாசில்தார் சக்திவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.