சேந்தமங்கலம்: கருவாட்டாறு தடுப்பணையை உடைத்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அப்பகுதி விவசாயிகள், மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை அடிவாரத்திலிருந்து, மழைக்காலங்களில் நக்காறு, செட்டிகுளம், கருவாட்டாறு வழியாக பெரியகுளத்திற்கு சென்று, பழையபாளையம் ஏரிக்கு தண்ணீர் சென்றடைகிறது.
சேந்தமங்கலம் யூனியனுக்குட்பட்ட, வாழவந்திகோம்பை பஞ்சாயத்தில் உள்ள கருவாட்டாறு பகுதியில், 30 ஏக்கர் பரப்பில் மா, தென்னை, மரவள்ளி உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். கருவாட்டாறு தடுப்பணையில் நீர் தேங்கும்போது, அப்பகுதியில் உள்ள விவசாய கிணறுகளின் நீர்மட்டம் உயர்ந்து, விவசாயம் செய்ய ஏதுவாக இருந்தது.
கடந்த, 2013ல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் கட்டப்பட்ட கருவாட்டாறு தடுப்பணையை மர்ம நபர்கள் சிலர், பொக்லைன் இயந்திரம் மூலம், நேற்று முன்தினம் இடித்து உடைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் விவசாயம் பாதிக்கும் நிலை உள்ளது. தடுப்பணையை உடைத்த மர்ம நபர்கள் மீது, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.