நாமக்கல்: 'உயர்கல்வி பயில சான்று கேட்டு விண்ணப்பித்த மாணவர்களுக்கு, இணையதளத்தில் பதிவேற்றம் செய்து சான்று பெறுவதற்கான சிறப்பு முகாம் நாளை நடக்கிறது' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில், 2023 மார்ச், ஏப்ரலில் நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் உயர்கல்வி பயில, முதல் பட்டதாரி சான்று, 209, வருமானச்சான்று, 85, இருப்பிட சான்று, 220, ஜாதிச்சான்று, 4 என, மொத்தம், 518 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த மாணவர்களின் ஆவணங்களை, இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, சான்று பெற சிறப்பு முகாம் நடக்கிறது. மேற்கண்ட சான்று கேட்டு விண்ணப்பித்த மாணவ, மாணவியர், மையத்தின் தலைமையாசிரியரிடம் தேவையான ஆவணங்களை, நாளை காலை, 9:30 மணிக்கு ஒப்படைத்து, இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.
சான்றுகள் பதிவேற்றம் செய்யும் பள்ளிகளின் பெயர் விபரம்:
நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, முத்துகாப்பட்டி, கோனுார் மற்றும் ஆர்.பட்டணம் அரசு மேல்நிலைப்பள்ளி, நாமகிரிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அலவாய்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி. மணலி ஜேடர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, பாண்டமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, தேவனாங்குறிச்சி மற்றும் தண்ணீர்பந்தல்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, குமாரபாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி. இணையத்தில் விண்ணப்பித்தவுடன், மாணவர்களுக்கு மேற்கண்ட சான்றுகள் கிடைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும். மாணவ, மாணவியர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.