நாமக்கல்: 'விவசாயிகள், 'ஆன்ட்ராய்டு' மொபைல் போனில், 'உழவன் செயலி'யை பதிவிறக்கம் செய்து, வேளாண் தொடர்பான விபரங்களை பெற்று பயன்பெறலாம்' என, நாமக்கல் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் துரைசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலை, வேளாண் வணிகம் மற்றும் வேளாண் பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த விபரங்களை, விவசாயிகள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில், 'உழவன் செயலி' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 'உழவன் செயலி'யை 'ஆன்ட்ராய்டு' மொபைல் போனில், 'பிளே ஸ்டோர்' வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியில், தங்களது அடிப்படை தகவல்களான பெயர், முகவரி, மொபைல் எண் மற்றும் ஆதார் விபரங்களை பதிவு செய்து, 'உழவன் செயலி'யை பயன்படுத்தலாம்.
உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் மற்றும் மானிய திட்டங்கள், வேளாண் வளர்ச்சி திட்டம், இடுபொருள் முன்பதிவு, பயிர் காப்பீடு விபரம், உரங்கள் மற்றும் விதை இருப்பு நிலை, சந்தை விலை நிலவரம், வானிலை அறிவுரைகள், பயிர் சாகுபடி வழிகாட்டி உள்பட, 23 வகையான பயன்பாடுகளை அறிந்து கொள்ளலாம். நாமக்கல் மாவட்ட விவசாயிகள், தங்களது, 'ஆன்டராய்டு' மொபைல் போனில், 'உழவன் செயலி'யை பதிவிறக்கம் செய்து, வேளாண் தகவல்களை அறிந்து
பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.