நாமக்கல்: நாமக்கல், ராமாபுரம்புதுார் பர்வதவர்தினி சமேத ராமநாதர் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று கோலாகலமாக நடந்தது.
நாமக்கல் அடுத்த, ராமாபுரம்புதுாரில் உள்ள பர்வதவர்தினி சமேத ராமநாதர் சுவாமி, செல்வ கணபதி, முருகன், பகவதி அம்மன், நவகிரஹங்கள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேக விழா, நேற்று நடந்தது.
அதை முன்னிட்டு, கடந்த, 4ல், மோகனுார் காவிரியாற்றிலிருந்து, பக்தர்கள் தீர்த்க்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். 5ல், மஹாகணபதி, நவகிரஹ ஹோமம், வாஸ்த சாந்தி பூஜை நடத்தப்பட்டு பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றப்பட்டது. தொடர்ந்து முளைப்பாரி அழைத்தலும், முதற்கால பூர்ணஹூதியும் நடந்தது. 6 காலை, திருமுறை பாராயணம், கோமாதா பூஜை, இரண்டாம் கால யாகம், மாலையில் மூன்றாம்கால யாகபூஜை நடந்தது.
நேற்று காலை, 4:00 மணிக்கு நான்காம் கால பூஜையும், 6:00 மணிக்கு யாக சாலையிலிருந்த கும்பங்கள் மூலாலயத்திற்கு அழைத்து செல்லப்பட்டு, காலை, 6:15 மணிக்கு அனைத்து கோபுர விமானங்களுக்கும் சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்திவைத்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.