பெரம்பலுார்: பெரம்பலுாரில், ரவுடியை வெட்டி கொலை செய்த மற்றொரு ரவுடி கும்பலைச் சேர்ந்த தம்பதி உள்பட ஆறு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பெரம்பலுார் மாவட்டம், அரணாரை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ், 39, ரவுடியான இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 5ம் தேதி பெரம்பலுார் பாலக்கரை பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டல் மதுபான பாரில் தனது நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தபோது, மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து, பெரம்பலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். கொலை தொடர்பாக பெரம்பலுார் எளம்பலுார் ரோடு பகுதியைச் சேர்ந்த அபினாஷ், 22, செஞ்சேரி நவீன்,19, ஆலம்பாடி துறையூர் வடமலை நவீன், 20, திருச்சி மாவட்டம் பூலாங்குடி காலனி பள்ளிவாசல் தெரு பிரேம் ஆனந்த், 45, இவரது மனைவி ரமணி, 34, ஆகிய ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.கட்ட பஞ்சாயத்து செய்வதில் ஏற்பட்ட போட்டி காரணமாக கொலை நடந்தது தெரியவந்துள்ளது.