தர்மபுரி:தர்மபுரி நகராட்சி தி.மு.க., கவுன்சிலரின் மகளை கொலை செய்த, 17 வயது சிறுவன் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டான்.
தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில், தர்மபுரி நகராட்சி, எட்டாவது வார்டு தி.மு.க., கவுன்சிலர் புவனேஸ்வரன் மகள் ஹர்ஷா, 23, நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்டார்.
போலீஸ் விசாரணையில், தேன்கனிக்கோட்டை வாலிபர், தர்மபுரியைச் சேர்ந்த, 17 வயது சிறுவன் ஆகியோர் அதிக நேரம் அவரிடம் போன் பேசியது தெரிந்தது. விசாரணையில், சிறுவன் ஹர்ஷாவை கொலை செய்தது உறுதியானது.
போலீசார் கூறியதாவது:
சிறுவன் ஓராண்டிற்கு முன் நண்பர் வீட்டிற்கு சென்றபோது, அவரது சகோதரி தோழியான ஹர்ஷாவுடன் நட்பு ஏற்பட்டு, பின் காதலானது.
பட்டதாரியான ஹர்ஷா, ஓசூர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். அப்போது தேன்கனிக்கோட்டை வாலிபர் ஒருவருடன் காதல் ஏற்பட்டது. இதனால், சிறுவனிடம் பேசுவதை தவிர்த்தார்.
சிறுவன் ஆத்திரமடைந்து, ஹர்ஷாவிடம் கடந்த, 6ல் போனில் பேசி, 'ஒருமுறை தனிமையில் சந்தித்து பேசலாம்' என, கெஞ்சியுள்ளார். அன்று இரவு, 10:30 மணிக்கு, தர்மபுரி பஸ் ஸ்டாண்ட் வந்த ஹர்ஷாவை, சிறுவன் தன் பைக்கில் நரசிங்கபுரம் கோம்பை வன பகுதிக்கு அழைத்துச் சென்று, தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியுள்ளார்.
ஹர்ஷா மறுக்கவே, இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில், சிறுவன், ஹர்ஷாவை, அவர் அணிந்திருந்த துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொன்று தப்பி உள்ளார்.
இவ்வாறு தெரிவித்தனர்.
சிறுவனை கைது செய்த போலீசார், சேலம் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.