புழல், சென்னை புழல் அடுத்த விநாயகபுரம், கல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பச்சையப்பன், 30. தனியார் ஊழியர்.
நேற்று முன் தினம் இரவு, அவர் வசிக்கும் பகுதியில், சிலர் இரு சக்கர வாகனத்தில், அதிவேகமாக சென்று திரும்பினர். மற்றவர்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க, அவர்களை பச்சையப்பன் கண்டித்தார்.
அ.தி.மு.க., பிரமுகர் கந்தராஜிடம், இருசக்கரத்தில் சென்றவர்கள் இது குறித்து புகார் தெரிவித்துள்ளனர்.
கந்தராஜும், அவரது உறவினர் கார்த்திக், 26 என்பவரும், பச்சையப்பன் வீட்டிற்கு சென்று, அவரிடம் தகராறு செய்தனர். சரமாரியாக தாக்கியதில் காயமடைந்த பச்சையப்பன், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகார் படி வழக்கு பதிவு செய்த புழல் போலீசார், நேற்று காலை, கந்தராஜ் உட்பட இருவரை கைது செய்தனர்.