சேலம்:சேலத்தில், 8 கார்களின் கண்ணாடிகளை உடைத்து மடிக்கணினி, பணத்தை திருடிய திருச்சி வாலிபர் கைது செய்யப்பட்டார். அவர் மீது 82 வழக்குகள் உள்ளது.
சேலம் சீலநாயக்கன்பட்டி, கொண்டலாம்பட்டி, கந்தம்பட்டி, திருவாக்கவுண்டனுார், குரங்குச்சாவடி, மாமாங்கம் உள்ளிட்ட இடங்களில் ஏராளமான ஹோட்டல்கள் உள்ளன.
அங்கு நிறுத்தப்படும் கார்களின் பின்புற கண்ணாடிகளை உடைத்து மடிக்கணினி, 'ஸ்மார்ட் வாட்ச்', பணம், மொபைல் போன் ஆகியவற்றை மர்ம கும்பல் திருடி வந்தது.
பிப்ரவரி முதல் ஜூன், 1 வரை, சூரமங்கலம், அன்னதானப்பட்டி, பள்ளப்பட்டி, அழகாபுரம் போலீஸ் ஸ்டேஷன்களில், 11 திருட்டு வழக்குகள் பதிவாகின.
அன்னதானப்பட்டி உதவி கமிஷனர் அசோகன் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரித்தனர். நேற்று முன்தினம், திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுார் அருகே சிறுகாம்பூரைச் சேர்ந்த ரகுபதி, 27, என்பவரை கைது செய்தனர்.
அவரிடமிருந்து மடிக்கணினி, ஐ பேடு, மொபைல் போன், ஒரு சவரன் சங்கிலியை மீட்டனர். அவரது கூட்டாளியான திருச்சி, ராம்ஜி நகரைச் சேர்ந்த குணா, 32, என்பவரை தேடுகின்றனர்.
ரகுபதி மீது தமிழகம் முழுதும் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில், 82 திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.