நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்ட தி.மு.க.,வில், அமைச்சர் - மேயர் உச்ச கட்ட கோஷ்டி பூசலை முடிவுக்கு கொண்டு வர, நேற்று கனிமொழி எம்.பி., நாகர்கோவிலில் பஞ்சாயத்து நடத்தினார்.
சட்டசபை தேர்தலில், முதல்வர் ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் சுரேஷ்ராஜன் நாகர்கோவில் தொகுதியில் தோற்றதால், மாவட்டத்தில் ஜெயித்த மற்றொரு எம்.எல்.ஏ.,வான மனோதங்கராஜ் அமைச்சர் ஆனார்.
நாகர்கோவில் மாநகராட்சியில் மேயராக மகேஷ் வென்றார்.
பதவி பறிப்பு
மேயர் தேர்தலில் அவரை தோற்கடிக்க, பா.ஜ.,வுடன் இணைந்து செயல்பட்டதாக சுரேஷ்ராஜன் மீது அமைச்சரும், மேயரும் இணைந்து தலைமையிடம் புகார் செய்ததால், சுரேஷ்ராஜன் வசம் இருந்த கிழக்கு மாவட்ட செயலர் பதவி பறிக்கப்பட்டு, மேயர் மகேஷூக்கு தரப்பட்டது.
விரிசல்
பின்னர் இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்பட்டு வந்த அமைச்சர் - மேயர் இடையே சில மாதங்களாக விரிசல் ஏற்பட்டது.
மேயர் மகேஷ் கன்னியாகுமரி மாவட்ட தி.மு.க., அலுவலகத்தை தன் சொந்த செலவில் சீரமைத்து, கருணாநிதிக்கு சிலை அமைத்து, முதல்வரை அழைத்து திறப்பு விழா நடத்திக் காட்டினார்.
இது அமைச்சருக்கு பொறாமையை ஏற்படுத்தியதாகவும், அது முதல் இருவருக்கும் புகைச்சல் நிலவி வருவதாகவும் தெரிகிறது. பல்வேறு விவகாரங்களில் இருவருக்கும் உரசல் ஏற்பட்டதால், அமைச்சர் நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் மேயர் தவிர்த்தார்.
புகார்
மேலும், தன் கிழக்கு மாவட்ட கட்சி விவகாரத்தில் அமைச்சர் தலையிடுவதாகவும், கவுன்சிலர்களை துாண்டி விடுவதாகவும் கட்சி மேலிடத்தில் புகார் செய்தார்.
கட்சி தலைமை அமைச்சரை கண்டித்ததாக கூறப்படுகிறது. கோபமடைந்த அமைச்சர், மாநகராட்சி துணை மேயர் மேரிபிரின்சி லதா மூலம், பெண் கவுன்சிலர்களை மேயர் தரக்குறைவாக பேசுவதாக புகார் அளித்துள்ளார்.
இதனால் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அமைச்சர், மேயர் யார் பக்கம் செல்வது என தெரியாமல் குழம்பி இருந்தனர். இந்நிலையில், நேற்று மாலை கனிமொழி எம்.பி., நாகர்கோவிலில் உள்ள தி.மு.க. மாவட்ட கட்சி அலுவலகத்திற்கு வந்தார்.
மாற்றம்
அமைச்சர் - மேயர் மோதலை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், இருவரிடமும், கவுன்சிலர்கள், நிர்வாகிகள் என, தனித்தனியாக அழைத்து கருத்து கேட்டார்.
அவர் முதல்வரிடம் அளிக்கும் அறிக்கையின் படி, ஓரிரு நாட்களில் குமரி மாவட்ட தி.மு.க.,வில் ஏதாவது மாற்றம் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.