விருதுநகர்:தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 20 ஆயிரம் காலிப் பணியிடங்கள், உதிரிப் பாகங்கள் பற்றாக்குறை போன்ற காரணங்களால் அரசு பஸ் சேவை குறைக்கப்பட்டது.
இதனால் பயணிகள் அவதிப்படுகின்றனர்,என, சி.ஐ.டி.யு., போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஆறுமுகநயினார் கூறினார்.
அவர் கூறியதாவது:
தமிழகத்தில் செயல்படும் 315 அரசு பஸ் பணிமனைகளில் 1.40 லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்த நிலையில் ஓய்வு உள்ளிட்ட காரணங்களால் தற்போது 1.16 லட்சம் பேர் மட்டுமே உள்ளனர். காலிப்பணியிடங்கள், உதிரிப்பாகங்கள் பற்றாக்குறையால் 2 ஆயிரம் பஸ்களை இயக்க முடியாத நிலை உள்ளது.
15 ஆண்டு கடந்த பஸ்களை ஓரம் கட்டாமல் தொடர்ந்து இயக்குவதால் பழுதாகி நடுவழியில் நிற்கின்றன. ஊரகப் பகுதிகளில் குறிப்பிட்ட நேரத்திற்கு பஸ்கள் வருவதும் கேள்விக் குறியாகியுள்ளது. வெவ்வேறு வழித் தடங்களில் இயக்கப்பட்டு வரும் பழைய பஸ்களை புதிய வழித் தடங்களுக்கு மாற்றி விடுகின்றனர்.
குறைவான பஸ்கள் இயக்கத்தால் பள்ளி விடுமுறை நாட்களிலேயே அனைத்து வழித் தடங்களிலும் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. பள்ளிகள் திறந்த பிறகு நிலைமை மேலும் சிக்கலாகும். இதை எதிர்கொள்ள அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனவே விரைவில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். உதிரி பாகங்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும், என்றார்.