கூடலுார்:மதுரை குடிநீர் திட்ட பணிகளுக்காக முல்லைப் பெரியாறு அணையில் குறைவான நீர் திறந்து விடப்பட்டுள்ளதால், நெல் நாற்றுகள் வளர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணை நீரை நம்பி கம்பம் பள்ளத்தாக்கில்14,707 ஏக்கரில் நெல் சாகுபடி நிலங்கள் உள்ளன. முதல் போக நெல் சாகுபடிக்காக ஜூன் 1ல் வினாடிக்கு 300 கன அடி திறந்துவிடப்பட்டது. ஆனால் 150 கன அடி மட்டுமே தமிழகப் பகுதிக்கு வெளியேறியது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. பின் 50 கன அடி மட்டுமே அதிகரித்து 200 கன அடியாக வெளியேற்றப்படுகிறது.
மதுரை குடிநீர்
மதுரை குடிநீருக்காக முல்லைப் பெரியாற்றிலிருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தில் குழாய் பதிக்கும் பணி, லோயர்கேம்ப் வண்ணான்துறை ஆற்றில் தடுப்பணை, நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணியும் நடந்து வருகிறது. 2022 மே-ல் துவங்கிய இப்பணி ஆமை வேகத்தில் நடக்கிறது. இப்பணிகளுக்காக ஆற்றில் மாற்றுப்பாதை அமைத்து தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கூடுதல் நீர் திறக்கப்பட்டால் குடிநீர் திட்டப்பணிகளுக்கு பிரச்னை ஏற்படும் என 200 கன அடி மட்டுமே திறக்கப்பட்டுள்ளது.
வேதனையில் விவசாயிகள்
ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் திறக்கும் போது 300 கன அடி வெளியேறும். தேனி மாவட்டத்தில் குடிநீருக்கு போக மீதமுள்ள தண்ணீர் நெல் நாற்றுகள் வளர்க்க பயன்படும். தற்போது 200 கன அடி மட்டுமே வருவதால் கடைமடை பகுதி நாற்றங்காலில் நாற்றுகள் வளர்ப்பதற்கு தண்ணீர் வரவில்லை. கூடலூர், கம்பத்திலும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மின் இழப்பு
விவசாயத்திற்காக தண்ணீர் திறந்தவுடன் லோயர்கேம்ப் நீர் மின் நிலையத்தில் மின் உற்பத்தி துவங்கி விடும். 250 கனஅடி நீர் இருந்தால் மட்டுமே மின் உற்பத்தி செய்ய முடியும். மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் மின் நிலைய பராமரிப்பு பணி நடக்கும் போதே மதுரை குடிநீர் திட்டத்திற்காக தடுப்பணை கட்டி முடித்திருந்தால் தற்போது குறைவாக நீர் திறக்க அவசியம் இருந்திருக்காது. மின் உற்பத்தி செய்ய முடியாத நிலையையும் தடுத்திருக்கலாம்.