ஸ்ரீவில்லிபுத்துார்:தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் சென்னை இந்தியன் வங்கியில் கணக்கு துவக்கப்பட்டு அன்றாட வரவினங்களை அதில் டெபாசிட் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் தினசரி நிர்வாகச் செலவினங்களுக்கு பணம் எடுப்பது குறித்து எந்த தகவலும் தெரிவிக்காததால் ஊராட்சி தலைவர்கள் தவிக்கின்றனர்.
தமிழகத்தில் 12 ஆயிரத்து 618 ஊராட்சிகள் உள்ளன. ஒவ்வொரு ஊராட்சியிலும் பொது நிதி கணக்கு, மின், குடிநீர் கட்டணம், ஊராட்சி, மாநில திட்டங்கள், நுாறு நாள் திட்டம், பசுமை வீடுகள் திட்டம், ஊழியர்களுக்கான சம்பளம், திடக்கழிவு மேலாண்மை திட்டம், மத்திய நிதிக்குழு மானியம் என 11 வகை கணக்குகள் தனித்தனியாக பல்வேறு வங்கிகளில் உள்ளன.
தற்போது அனைத்து கணக்குகளையும் ஒரே வங்கி கணக்கின் கீழ் கொண்டு வரும் நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.
இதன்படி அனைத்து ஊராட்சிகளுக்கும் சென்னை சைதாப்பேட்டை இந்தியன் வங்கியில் தனித்தனி கணக்குகள் துவக்கப்பட்டு ஜூன் 1 முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
ஒவ்வொரு ஊராட்சியிலும் தினசரி வசூலிக்கப்படும் வரி வருவாய் தொகையை இந்த கணக்கில் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி பணம் டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது.
அதே நேரம் ஊராட்சியின் சார்பில் தினசரி செலவுகளுக்கு எப்படி பணம் கொடுப்பது என்பதற்கான வழிகாட்டுதல்கள் அளிக்கப்படவில்லை.
இதனால் தற்போது பல்வேறு வங்கிகளில் உள்ள கணக்குகளின் இருப்புத் தொகையை எடுத்து செலவழித்து வருகின்றனர். அதுவும் இம்மாதத்திற்குள் காலியாகிவிடும். வரும் மாத செலவுக்கு என்ன செய்வது என தெரியாமல் ஊராட்சி தலைவர்கள் தவிக்கின்றனர்.
இது குறித்து ஊராட்சி தலைவர்கள், செயலாளர்கள் கூறியதாவது: 11 கணக்குகளையும் ஒரே கணக்கில் கொண்டு வருவது நிர்வாக சிரமங்களை குறைப்பதால் வரவேற்கத்தக்கது.
அதே நேரம் தினசரி நிர்வாக செலவுகளுக்கு பணம் எடுப்பது என்பது குறித்த தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லை. செலவினங்களுக்கு பணம் கொடுப்பதில் தாமதம் ஏற்படும் நிலை உள்ளது.
எப்படி வருவாயை பெற்றுக் கொள்கிறார்களோ, அதுபோல் தினசரி நிர்வாக செலவினங்களுக்கும் பணம் வழங்க வழி செய்ய வேண்டும். இதில் தாமதம் ஏற்பட்டால், ஊராட்சிகளில் அடிப்படை பணிகள் பாதிக்கும், என்றனர்.