ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் அருகே நொச்சியூரணி கடற்கரையில் படகிலிருந்த இரண்டரை கிலோ எடையுள்ள 4 தங்க கட்டிகளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். அவற்றை கடத்தியவர்களை தேடி வருவதாக சுங்கத்துறையினர் தெரிவித்தனர்.
மாவட்ட சுங்கத்துறை அதிகாரிகள் ஜூன் 5ல் ராமேஸ்வரம் அருகே வேதாளை நல்ல தண்ணீர் தீவு கடற்கரையில் ரோந்து சென்றனர். அவ்வழியாக சென்ற ஒரு மீன்பிடி படகை நிறுத்தும்படி கூறினர். படகில் இருந்தவர்கள் வேகமாக தப்ப முயன்றதால் சுங்கத்துறையினர் விரட்டினர். புதுமடம் நொச்சியூரணி கடற்கரை அருகே பாறையில் மோதி படகு நின்றது. படகிலிருந்த 4 பேர் தப்பினர்.
படகில் ரூ.3 கோடி மதிப்பில் 5 கிலோ தங்கக் கட்டிகள் இருந்தாக தகவல் வெளியானது. கடத்தல்காரர்கள் மேலும் பல தங்கக்கட்டிகளை கடலில் வீசியிருக்கலாம் என்ற சந்தேகத்தின்படி சுங்கத்துறையினர் ஜூன் 6, 7 ல் ஸ்கூபா டைவிங் வீரர்கள் மூலம் கடலுக்கு அடியில் தேடினர். ஆனால் அலையின் சீற்றம் அதிகம் இருந்ததால் தேடும் பணியை நிறுத்தி விட்டனர்.
இந்நிலையில் சுங்கத்துறையினர் அறிக்கையில் கூறியுள்ளதாவது: ரோந்து பணியின் போது இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட இரண்டரை கிலோ தங்கக் கட்டிகள் படகிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. மதிப்பு ரூ.ஒரு கோடியே 54 லட்சம். கடத்தலில் ஈடுபட்டவர்களை தேடி வருகிறோம், என கூறியுள்ளனர்.