தூத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டத்தில் மணல் கொள்ளையை தடுத்த முறப்பநாடு வி.ஏ.ஓ., லூர்து பிரான்சிஸ் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் எஸ்.ஐ., சுரேஷ் உட்பட மூன்று போலீசார் நீலகிரி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டனர்.
முறப்பநாடு பகுதிகளில் தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட கலியாவூரை சேர்ந்த ராமசுப்பிரமணியன் மீது போலீசில் வி.ஏ.ஓ., லூர்து பிரான்சிஸ் புகார் அளித்திருந்தார்.
ஆத்திரமுற்ற ராமசுப்பிரமணியன் மற்றும் மாரிமுத்து ஆகியோர் ஏப்., 25 முறப்பநாடு வி.ஏ.ஓ., அலுவலகத்தில் லூர்துபிரான்சிசை வெட்டி கொலை செய்தனர்.
இச்சம்பவம் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொலை வழக்கில் கைதான இருவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. மணல் கடத்தலுக்கு துணை போகும் வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் அங்கு பணிபுரிந்த போலீஸ் ஏட்டு சரவணன், தனிப்பிரிவு ஏட்டு மகாலிங்கம், முறப்பநாடு ஸ்டேஷன் எஸ்.ஐ.,யாக இருந்து சாயர்புரத்திற்கு மாற்றப்பட்ட சுரேஷ் ஆகியோரை நீலகிரி மாவட்டத்திற்கு மாற்றி டி.ஜி.பி., அலுவலகம் உத்தரவிட்டது.