வடமதுரை:திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை வங்கியில் ஏற்பட்ட தவறால் ஓய்வு ராணுவ வீரருக்கு 13 ஆண்டுகளுக்கான கூடுதலாக ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது. ஓராண்டாக இவருக்கான ஓய்வூதியம் வழங்காமல் வங்கி பிடித்தம் செய்வதால் தவிக்கிறார்.
தென்னம்பட்டி எலப்பார்பட்டியை சேர்ந்தவர் கே.குரும்ப தேவன். 1954ல் பிறந்த இவர் ராணுவத்தில் 1973ல் சேர்ந்து 1997ம் ஆண்டில் ஓய்வு பெற்றார். ஓய்வூதியத்தை வடமதுரை கனரா வங்கி மூலம் பெற்று வந்தார். 2009 ஜூனில் இவருக்கு 80 வயது எட்டியதாக தவறாக கணக்கிட்ட வங்கி ஓய்வூதிய நடைமுறைப்படி இவருக்கு 2022 வரை ரூ.18,74,476 ஐ கூடுதலாக வழங்கியது. 2022ல் இந்த தவறு கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து குரும்பதேவன் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியாமல் முடக்கியது. மாதாந்திர ஓய்வூதியமும் வழங்கப்படவில்லை.
குரும்பதேவன் கூறியதாவது: 25 ஆண்டுகளில் இரு பிரிவுகளில் பணிபுரிந்ததால் இரட்டை ஓய்வூதியம் கிடைப்பதாக நினைத்தேன். தற்போது கூடுதலாக வழங்கி விட்டோம் என்று முழு ஓய்வூதியத்தையும் முடக்கியுள்ளனர். வயதான காலத்தில் பணம் இல்லை என்பதால் உறவுகளும் புறம் தள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது, என்றார்.
மாவட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்க செயலாளர் எல்.ராஜூ கூறியது: 2022 ஜூன் வரை வங்கிகளுக்கு ராணுவம் வழங்கும் உத்தரவுபடி ஓய்வூதியம் வங்கி கணக்கில் வழங்கப்பட்டது. 80 வயது கடந்தவருக்கு 20 சதவீதம், 85 கடந்தவருக்கு 30, 90 கடந்தவருக்கு 40, 95 கடந்தவருக்கு 50, 96க்கு மேல் 100 சதவீதம் அடிப்படை ஓய்வூதியம், அகவிலைப்படி சேர்த்து வழங்கப்படும்.
2022 ஜூனுக்குப்பபின் ராணுவமே ஓய்வூதியர் வங்கி கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்ப துவங்கியது. அப்போது தான் குரும்பதேவனுக்கு தவறுதலாக அதிக ஓய்வூதியம் வழங்கியது தெரிந்தது. இதுபோன்ற தவறுகள் நடந்தாலும் ஓய்வூதியத்தை நிறுத்த கூடாது என உத்தரவு உள்ளது, என்றார்.
வங்கி மேலாளர் விஷ்ணு கூறுகையில், 'ஓய்வூதியரின் வாழ்வாதாரம் கருதி குறிப்பிட்ட தொகையை அவருக்கு ஓய்வூதியமாக வழங்க அனுமதி கேட்டு தலைமையகத்துக்கு கடிதம் அனுப்பி உள்ளோம்,'' என்றார்.