கிருஷ்ணகிரி:தண்ணீர் தொட்டியில் விழுந்து பலியான பெண் குழந்தையின் குடும்பத்துக்கு நிவாரண தொகை வாங்கி தருவதாக கூறி அரசு அதிகாரி போல் நடித்து பணம் பறித்தவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அடுத்த ஒட்டுக்கொட்டாயைச் சேர்ந்தவர் திருப்பதி33; கட்டட மேஸ்திரி. இவரது 4 வயது மகள் கோமதிக்கு பிறவி கண் பார்வை குறைபாடு இருந்தது.
மே 24ல் வீட்டின் முன் இருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை இறந்தது. இந்நிலையில் திருப்பதி வீட்டிற்கு ஜூன் 6ல் இருவர் வந்தனர்.
அதில் ஒருவர் தான் அரசு அதிகாரி எனக்கூறி குழந்தையின் விபரத்தை கேட்டு ஆதார் ரேஷன்கார்டு நகல்களை வாங்கினார். அரசு நிதியாக 5.50 லட்சம் ரூபாய் பெற்று தருவதாக கூறி 5000 ரூபாய் பெற்றுச் சென்றார்.
நேற்று முன்தினம் திருப்பதியை தொடர்பு கொண்ட அந்த நபர் வேறு அலைபேசியில் இருந்து பேசினார். அப்போது தனக்கு மேலும் 20 ஆயிரம் ரூபாய் வேண்டும் எனக் கூறினார்.
சந்தேகமடைந்த திருப்பதி விசாரித்தபோது வந்தது போலி அரசு அதிகாரி என்றும் இரண்டாவதாக பேசியது அவருடன் வந்த கிருஷ்ணகிரி ஆட்டோ டிரைவரான ஜாபரு என்றதும் தெரியவந்தது.
அவரிடம் திருப்பதி விசாரித்ததில் ஆட்டோவில் சவாரி வந்தவர் மது வாங்கி கொடுத்து தன்னை பயன்படுத்தினார் என கூறியுள்ளார்.
புகாரின் படி ஆட்டோ டிரைவரிடம் தப்பிய போலி அரசு அதிகாரி குறித்து வேப்பனஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.