பெரம்பலுார்:-பெரம்பலுாரில், தொழில் போட்டி காரணமாக, ரவுடியை வெட்டிக் கொலை செய்த, மற்றொரு ரவுடி கும்பலை சேர்ந்த தம்பதி உட்பட ஆறு பேரை, போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலுார் மாவட்டம், அரணாரை கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ்,39, என்பவர் தி.மு.க., கிளை செயலராகவும் இருந்தார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன், 'தமிழ் தேசம்' என்ற சினிமா இயக்கிய அவர், முஸ்லீம் பெண்ணை காதலித்து, திருமணம் செய்து கொண்டதால், அப்துல் ரகுமான், என்று பெயரை மாற்றிக் கொண்டார்.
ஏற்கனவே, நண்பரை வெட்டிக்கொலை செய்தது உட்பட இரண்டு கொலை வழக்கு, வழிப்பறி கட்டப் பஞ்சாயத்து, மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
கடந்த 5ம் தேதி, பெரம்பலுார் பாலக்கரை பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டல் மதுபான பாரில், நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்த போது, மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இது குறித்து, பெரம்பலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். விசாரணையில், அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்த மற்றொரு பிரபல ரவுடியான அழகிரிக்கும் செல்வராஜுவுக்கும் தொழில் போட்டி இருந்துள்ளது.
மேலும், கட்டப்பஞ்சாயத்து செய்வதில், அழகிரிக்கு போட்டியாக செல்வராஜ் இருந்ததால், செல்வாக்கு குறைந்து வந்தது.
இதனால், ஆத்திரமடைந்த அழகிரி, தனது மனைவி சங்கீதாவுடன் திட்டம் தீட்டி, திருச்சியை சேர்ந்த கும்பலை வரவழைத்து, செல்வராஜை கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
தொடர்ந்து, செல்வராஜை கொலை செய்த, பெரம்பலுாரை சேர்ந்த அபினாஷ்,22, செஞ்சேரி நவீன்,19, ஆலம்பாடியை சேர்ந்த 17 வயது சிறுவன், துறையூர் நவீன்,20, திருச்சி மாவட்டம், பூலாங்குடி காலனி பிரேம் ஆனந்த்,45, அவரது மனைவி ரமணி, 34, ஆகிய ஆறு பேரை, போலீசார் கைது செய்தனர்.
அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அபினாஷ் துறையூர் நவீன், செஞ்சேரி நவீன், பிரேம்ஆனந்த் ஆகிய நால்வரை திருச்சி மத்திய சிறையிலும், ரமணியை, திருச்சி பெண்கள் சிறையிலும், 17 வயது சிறுவனை திருச்சி இளஞ்சிறார் கூர்நோக்கு இல்லத்திலும் அடைத்தனர்.