பல்லடம்: பல்லடம் அருகே கல்குவாரியில் திடீரென வெடி வெடித்ததில், தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள கோடங்கிபாளையம் கிராமத்தில், 30க்கும் மேற்பட்ட கல்குவாரிகள், கிரஷர் நிறுவனங்கள் உள்ளன.
இங்குள்ள, கல்குவாரி ஒன்றில், ஒடிசா மாநிலம், பக்ரா மாவட்டத்தை சேர்ந்த பபன்சிங், 46; திருநெல்வேலி மாவட்டம், சென்டமங்கலத்தை சேர்ந்த மதியழகன், 47 ஆகியோர் தொழிலாளர்களாக வேலை பார்க்கின்றனர். நேற்று, அதிகாலை, 5:00 மணிக்கு, வெடி வைப்பதற்காக குழி அமைக்க, இருவரும் குவாரிக்குள் சென்றனர்.
திடீரென வெடி வெடிக்கும் சத்தம் கேட்டு, சக தொழிலாளர்கள், வந்து பார்க்கும்போது, பபன்சிங், அதே இடத்தில் உயிரிழந்து கிடந்தார். காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மதியழகனை, சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பல்லடம் போலீசார் கூறுகையில், 'தொழிலாளர்கள் இருவரும் வெடி வைப்பதற்கான குழி அமைக்க சென்றபோது, ஏற்கனவே வைக்கப்பட்டு, வெடிக்காமல் இருந்த வெடி ஒன்று திடீரென வெடித்துள்ளது; இதுதொடர்பாக விசாரித்து வருகிறோம்' என்றனர்.