கோவை: கோவையில், சர்ச்சைக்குரிய கருத்துகளை சமூகதளத்தில் பதிவிட்ட வாலிபர்கள், டில்லி உட்பட பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளனர். இதற்கான காரணம் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்ட, கோவை கரும்புக்கடை பாரத் நகரை சேர்ந்த சுலைமான், 27, அவரது நண்பர் சபா கார்டனை சேர்ந்த அப்துல் காதர், 27, ஆகியோரின் வீடுகளில், நேற்று முன்தினம், சிறப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் இரண்டு தனிப்படை அமைத்து, திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையில் மொபைல் போன்கள், லேப் டாப், மற்றும் சில புத்தகங்களை பறிமுதல் செய்தனர். பின், இருவரையும் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
தொடர்ந்து, இரண்டாவது நாளாக நேற்றும் அவர்களை வரவழைத்து, நுண்ணறிவு பிரிவு போலீசார் விசாரித்தனர். அதில், அவர்கள் இருவரும் டில்லி, துாத்துக்குடி, ஆந்திரா உட்பட பல்வேறு இடங்களுக்கு சென்று வந்தது தெரியவந்துள்ளது.
எதற்காக அவ்விடங்களுக்கு சென்று வந்தனர், அங்கு யாரை சந்தித்தார்கள், அவர்களிடம் என்ன பேசினர் என்பது உள்ளிட்ட, பல்வேறு கேள்விகளால் போலீசார் குடைந்து வருகின்றனர்.
முழு விசாரணைக்குப் பின்னரே, அவர்களின் முழு பின்னணியும் தெரியவரும் என்கின்றனர் போலீசார்.