கோவை: ரூ.1,300 கோடி மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நபர், கோவை கோர்ட்டில் சரணடைந்தார்.
கோவை சூலுாரை சேர்ந்தவர் ரமேஷ், 30. பீளமேட்டில் யு.டி.எஸ்., எனும் நிறுவனத்தை, 2012ம் ஆண்டு துவங்கி, சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், கேரளாவில் கிளைகளை ஏற்படுத்தினார்.
நிறுவனம் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட, 4 திட்டங்களில், 76 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ரூ.1300 கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்தனர்.
மக்களின் முதலீட்டு பணத்தை திருப்பிக் கொடுக்காமல், ரமேஷ் மோசடி செய்தார். பாதிக்கப்பட்டவர்கள், கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.
டி.எஸ்.பி., முருகானந்தம் தலைமையில், தனிப்படையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், தலைமறைவான ரமேஷ் கடந்த, 6ம் தேதி கோவை டான்பிட் கோர்ட்டில் சரணடைந்தார்.
போலீசார் கூறுகையில், 'சேலத்தில், அளிக்கப்பட்ட புகாரின் பேரில், ரமேஷ் கைது செய்யப்பட்டார். ஜாமினில் வந்தவர், சுல்தான்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட்டு வந்தார்; புகார்கள் குவிந்ததால் தலைமறைவானார்.
கோர்ட் பிடிவாரன்ட் பிறப்பித்ததை அறிந்து சரணடைந்தார். கேரளாவிலும் அவர் மீது வழக்குகள் உள்ளதால், அம்மாநில போலீசார் அவரை கைது செய்ய திட்டமிட்டுள்ளனர்.
கோவை போலீசாரும் காவலில் எடுக்க திட்டமிட்டுள்ளனர். முதலீடு செய்த, 76 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரில், இதுவரை தமிழகத்தில், 50, கேரளாவில், 44 பேர் மட்டுமே புகார் அளித்து உள்ளனர்' என்றனர்.