குன்னுார்: குன்னுாரில், மலை ரயில் பெட்டி தடம் புரண்டதால், மேட்டுப்பாளையம் செல்லயிருந்த ரயில் ரத்து செய்யப்பட்டது. பயணிகள், பஸ்கள் வாயிலாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
நீலகிரி மாவட்டம், ஊட்டியில் இருந்து மதியம் 2:00 மணிக்கு, 7 பெட்டிகளுடன் புறப்பட்ட மலை ரயில், குன்னுாருக்கு 3:00 மணிக்கு வந்தடைந்தது. பின், 3:20 மணிக்கு, 4 பெட்டிகளில், 180 சுற்றுலாப் பயணிகளுடன், முதல் பிளாட்பாரத்தில் இருந்து, மேட்டுப்பாளையம் கிளம்ப ஆயத்தமானது.
இந்நிலையில், கடைசி பெட்டியின் கடைசி சக்கரங்கள், தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டது. ரயில்வே பொறியியல் பிரிவு அதிகாரிகள், ஊழியர்கள் ஆய்வு செய்து, ரயில் இயக்கத்தை ரத்து செய்தனர்.
பயணிகள், பஸ்கள் வாயிலாக மேட்டுப்பாளையம் அனுப்பி வைக்கப்பட்டனர். பின், சீரமைப்பு பணியில், ஊழியர்கள் ஈடுபட்டனர்.