கோவை: கோவை மாவட்டம், காரமடை ஊராட்சி ஒன்றியம் மருதுார் ஊராட்சி தலைவராக பதவி வகிப்பவர் பூர்ணிமா,40. இவர், 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வாய்ப்பு பெறுவதற்கான பணியாளர்களை தேர்வு செய்யும் பொறுப்பில் இருப்பவர்.
இவர் பல்வேறு நபர்களுக்கு முறைகேடாக வேலை அட்டை வழங்கியுள்ளார். அவர்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில், வேலை செய்யாமலேயே சம்பள பணம் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளார். தொடர்ந்து சில ஆண்டுகளாக நடந்த இந்த மோசடியால் அரசுக்கு, 49 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மோசடிகள் பற்றி தெரியவந்ததால், லஞ்ச ஒழிப்பு போலீசார், 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை வாய்ப்பு பெற்ற பயனாளிகள் அனைவரது பட்டியலையும் சேகரித்து, விசாரணை நடத்தினர். இதில், மோசடி நடந்திருப்பதும், ஊராட்சி தலைவர் பூர்ணிமா பலன் பெற்றிருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார், பூர்ணிமா மீது ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.